

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது தலையில் கொம்பு முளைக்க வைக்கும் என்று சொல்லப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? திகைக்க வேண்டாம். ஏஐ பயன்பாட்டால் யாருக்கும் நிஜத்தில் கொம்பு முளைக்காதுதான். ஆனால், தலைகனம் அல்லது அறிவு மயக்கத்தை உண்டாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு முன் டன்னிங் க்ருகர் விளைவை (Dunning-Kruger Effect) பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். பிரபல உளவியல் வல்லுநர்கள் டேவிட் டன்னிங், ஜஸ்டீன் க்ருகர் ஆய்வு செய்து கண்டறிந்த உளவியல் தாக்கமே அவர்கள் பெயரில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
மனிதர்கள் குறிப்பிட்ட விஷயங்களில் தங்கள் திறனை மிகைப்படுத்தி நம்புவதைச் சுட்டிக்காட்டுவதாக இந்த விளைவு அமைகிறது. இது தொடர்பான ஆய்வுக்கட்டுரையை இருவரும் 1999இல் வெளியிட்டனர். திறனும் அனுபவமும் குறைவாக இருப்பவர்கள் தங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்றும், அதேநேரத்தில் உண்மையான திறன்மிக்கவர்கள் தங்கள் திறமையைக் குறைத்து மதிப்பிடுபவர்களாக இருக்கின்றனர் என்பதாக இந்த விளைவைப் புரிந்துகொள்ளலாம்.
சிந்திக்கும் திறன்: உடனே, திறமை இல்லாவிட்டாலும், வாய்ப்பேச்சு மூலமே வித்தகர்கள்போலத் தோன்றவைக்கும் திறன் கொண்டவர்களை, இந்த விளைவு சுட்டிக்காட்டுவதாக நினைத்துவிட வேண்டாம். இப்படி வாய்ப்பந்தல் மூலமே மற்றவர்களை வியக்கவைப்பது ஒரு திறன் (!) என்றாலும், டன்னிங் க்ருகர் விளைவு குறிப்பிடுவது இவ்வளவு மேம்போக்கானது அல்ல.
உண்மையில் இதைச் சிந்திக்கும் திறன் சார்ந்த சார்பு என்கின்றனர். சிந்திக்கும் திறன் தொடர்பான குறைபாடு இதற்குக் காரணம் என்றும் விளக்கம் தருகின்றனர். அதாவது, ஒரு குறிப்பிட்ட துறையில் திறன்பெற்று விளங்க வேண்டும் என்றால், அத்துறை தொடர்பான அறிவாற்றல் இருந்தால் மட்டும் போதாது. அந்த ஆற்றலைச் சீர்தூக்கிப் பார்க்கும் திறனும் இருக்க வேண்டும்.