

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நுட்பம் உணர்வில்லாதது என்பது தெரிந்த விஷயம்தான். அதன் ஆற்றல் குறித்துக் குறை சொன்னாலோ, கேலி செய்தாலோ ஏஐ கோபம் கொள்ளாது, பதிலடியும் தராது. (கோடிங் நிராகரிப்புக்காக வெகுண்டெழுந்து விமர்சனப் பதிவு எழுதிய ஏஐ ஏஜெண்ட் செயலை விதிவிலக்காகக் கருதலாம்).
ஏஐ நுட்பத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றாலும், குறை கூறும்போது கொஞ்சம் எச்சரிக்கையைக் கடைப்பிடிப்பது அவசியம். குறிப்பாக, ஏஐ நுட்பத்தின் போதாமையைச் சுட்டிக்காட்டி விவாதிக்கலாமே தவிர எள்ளி நகையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், இத்தனை ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்த பல குறைகளையும் விமர்சனங்களையும் கடந்து ஏஐ நுட்பம் முன்னேறி வந்திருக்கிறது. அதிலும் அண்மை ஆண்டுகளில் ஆக்கத்திறன் வடிவில் ஏஐ பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்துகொண்டிருக்கிறோம்.
ஒரு காலத்தில் ஏஐ நுட்பத்தால் முடியாது என்று சொல்லப்பட்டுவந்த விஷயங்களில் பல இப்போது சாத்தியமாகி இருக்கின்றன. எவ்வளவுதான் முன்னேறியிருந்தாலும், ஏஐ நுட்பத்தால் சரியாக மணி பார்க்கத் தெரியவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ள தகவலைச் சுட்டிக்காட்டவே இந்த முன்னுரை.
கடிகார மணி
ஆம், நவீன ஆக்கத்திறன் ஏஐ சேவைகளை இயக்கும் மொழி மாதிரிகள் நுட்பம் பரந்த அளவில் பல்வேறு பணிகளைச் செய்து முடிக்கும் வியக்க வைக்கும் திறன் பெற்றிருந்தாலும், கடிகாரம் பார்த்து மணி சொல்லும் விஷயத்தில் அவை கோட்டை விடுகின்றன என்று தெரிய வந்துள்ளது. கணித சமன்பாடு சார்ந்த விடைகளை எல்லாம் நொடிப்பொழுதில் சொல்லிவிடுகிறது.
பங்குகளைப் பட்டியலிட்டால் அலசி ஆராய்ந்து சொல்கிறது. ஆய்வுக்கட்டுரைகளைப் படித்துப்பார்த்துப் பொருள் தருகிறது என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், நவீன ஏஐ சேவைகள் மணி பார்த்துச் சொல்ல முடியாமல் தடுமாறுவதுதான் இன்றைய ஏஐ யதார்த்தம்.
பெரிய முள் இடத்தையும், சின்னமுள் இடத்தையும் கொண்டு கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைச் சொல்லும் பாலபாடத்தைச் சிறு குழந்தைகளும் எளிதாகக் கற்றுத்தேர்கின்றன. ஆனால், மொழி மாதிரிகள், இந்த வகை பழைய அனலாக் கடிகாரத்தில் காட்டப்பட்டும் நேரத்தைச் சரியாகச் சொல்ல முடியாமல் இருக்கின்றன.
ஸ்பெயினின் மாட்ரிட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு நான்கு முன்னணி மொழி மாதிரிகளைக் கொண்டு அனலாக் கடிகார மணி பார்க்கும் சோதனையை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடிகார தோற்றங்களைக் காட்டி மொழி மாதிரிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்தனர். நான்கு முன்னணி மொழி மாதிரிகளுமே சரியாக நேரம் சொல்ல முடியாமல் தடுமாறியுள்ளன.