

‘ஊதா கலரு ரிப்பன்’ எனும் தமிழ்த் திரைப்படப் பாடலில் ஊதா வண்ணம் இடம்பெற்றது தற்செயலானதா அல்லது ஊதா வண்ணத்தின் பொருள் சார்ந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், இணையத்தைப் பொறுத்தவரை ஊதா வண்ணத்துக்குத் தனி மதிப்பு இருக்கிறது.
சொல்லப்போனால் வண்ணங்களில் தனக்கெனத் தனி இணையதளம் கொண்ட வண்ணமாக ஊதாவைக் குறிப்பிடலாம். ஆம், பர்பிள்.காம் (Purple.com) எனும் பெயரில் ஊதா வண்ணத்துக்காக ஓர் இணையதளம் தொடங்கப்பட்டது.
ஊதா இணையதளத்தின் வரலாற்றுச் சிறப்பைப் பார்க்கும் முன், வேறு எந்த வண்ணங்களுக்காவது தனி இணையதளம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்காகச் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) உதவியை நாடினால் ஏமாற்றம்தான் கிடைக்கிறது.
எந்த வண்ணங்களுக்கு எல்லாம் தனி இணையதளம் இருக்கிறது எனும் கேள்விக்கு கூகுள் ஏஐ ஓவர்வியூவும் பதில் அளிக்கவில்லை, சாட்ஜிபிடியும் ஆச்சரியப்படும் வகையில் சுற்றி வளைத்து பதிலளித்தது.
வண்ணங்களுக்கு என அதிகாரபூர்வமாக இணையதளம் ஏதுமில்லை என்றாலும், குறிப்பிட்ட வண்ணங்கள் சார்ந்த அல்லது பெயர் கொண்ட தளங்கள் இருக்கின்றன என்பதுதான் அந்தப் பதில். ஊதா வண்ணத்துக்கான இணையதளத்தைப் போல, பச்சை வண்ணத்துக்கு இணையதளம் இருக்கிறதா என்று கேட்டாலும் நேரடி பதில் இல்லை.
எத்தனை வண்ணங்கள்?
தனித்தனியே வண்ணங்களின் பெயரிலான இணையதளங்களைத் தேடிப்பார்த்தபோது, சிவப்பு வண்ணத்தின் பெயரில் இணையதளம் இருக்கிறது. ஆனால், அது டிஜிட்டல் கேமராவுக்கானது. நீலத்துக்கெனத் தனி இணையதளம் இல்லை.
வண்ணங்களுக்கான இணையதளம் தொடர்பாக மூலப் பதிவுகள் அதிகம் இல்லாததால், ஏஐ சேவைகள் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க தடுமாறுவதைப் புரிந்துகொள்ளலாம். இப்போது மீண்டும் ஊதா வண்ண இணையதளத்துக்கு வருவோம்.