

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகளைப் பயன்படுத்துவது தவறல்ல. ஆனால், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். ஏஐ சேவைகளால் பயன்பெறு கிறோமா, பாதிக்கப்படுகிறோமா என்பதையும் அதுவே தீர்மானிக்கிறது. எளிமையாகச் சொன்னால், ஏஐ சேவைகளைச் சரியாகப் பயன்படுத்தினால், அவற்றின் மூலம் பலன் பெற்று நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம். இல்லையென்றால், ஏஐ பயன்பாடு நம் புத்திக் கூர்மையை மழுங்கடிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கலாம்.
இந்தப் பாதிப்புகளில் மிகவும் கவலையளிப்பது, ஏஐ சேவைகளை நமக்குப் பதிலாகச் சிந்திக்க அனுமதிப்பது என வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர். கல்வியாளர்கள் இதை ஆமோதிக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறையில் பணிகளை ‘அவுட்சோர்ஸ்’ செய்வது போலத்தான், நம் சிந்தனையை ஏஐ சேவைகளுக்கு மாற்றுவது என்கின்றனர். அதேபோல நம் புரிதலையும் பார்வையையும் மொழி மாதிரிகளுக்கு இடம் மாற்றிவிடக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர்.
சாட்பாட்டிடம் பொறுப்பு: ஏற்கெனவே பலரும் வெவ்வேறு அளவில் இதைச் செய்யத் தொடங்கியிருக்கிறோம். வேலைக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல் எழுதச் சொல்கிறோம்; பெரிய செய்திக் கட்டுரையை வாசிப்பதற்குப் பதில், ஏஐ சாட்பாட்களிடம் அதன் சுருக்கத்தைக் கேட்கிறோம்; மாதாந்திர பட்ஜெட் ஆலோசனை அல்லது உடற்பயிற்சி அட்டவணைக்குக்கூட சாட்பாட்களை நாடுகிறோம்.
ஓர் எளிய பிராம்ப்டில், வர்த்தகம் தொடங்குவதற்கான திட்டம் முதல் நன்றியுரை நிகழ்த்துவதற்கான பேச்சு வடிவம், ஆய்வுக்கட்டுரை என எதை வேண்டுமானாலும் சாட்பாட்களிடம் பெறலாம். சாட்பாட்களின் வெளிப்பாடும், வெகு நேர்த்தியாக ஈர்க்கும் வகையிலேயே அமைந் திருக்கும். இப்படி சாட்பாட்களை நாடுவது வசதியாக இருந்தாலும், இவ்வாறு செய்யும்போது, சிந்திக்கும் பொறுப்பையும் நாம் சாட்பாட்களிடம் ஒப்படைத்து விடுகிறோமா என யோசிப்பது அவசியம்.