

மாயஜால உலகுக்குச் சென்று வருவோமா? ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கும் ரகசிய இடத்தில் உள்ள கிளியின் வயிற்றில் தனது உயிரை ஒளித்து வைத்திருக்கும் மந்திரவாதியின் கதையைப் படித்த அனுபவம் இருக்கிறதா? செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நுட்பத்தை அலசி ஆராயும் தொடரில் திடீரென மாயஜாலக் கதையின் நினைவூட்டல் எதற்கு எனக் குழம்ப வேண்டாம். நவீன ஏஐ உலகில் நம்மில் பலரும் அந்த மந்திரவாதிபோல மாறிவிடும் அபாயம் இருக்கிறது. அதற்காகவே இந்த நினைவூட்டல்.
இப்போதும்கூடப் பலரும் இந்த மந்திரவாதியைப்போல மாறிக்கொண்டிருப்பதாக அறிவாற்றல் சார்ந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மந்திரவாதியைப் போல மாறுவதென்றால், நம் நினைவாற்றலை, அதை வளர்த்தெடுப்பதற்கான அறிவுப் பயிற்சியை வெளியுலகக் கருவிகளிடம் ஒப்படைக்கும் பழக்கத்தைதான் இப்படிக் குறிப்பிடுகின்றனர். எதற்கெடுத்தாலும் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளிடம் பதில் கேட்பது என இதைப் புரிந்துகொள்ளலாம்.