

ஏஐ சாட்பாட்கள் நம்மை அடிமையாக்கும் தன்மை கொண்டவை என்று சொல்லப்படுவது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் சேர்த்தே அளிக்கலாம். இதற்காக சாட்பாட்கள் மீது கோபம் கொள்ளத் தேவையில்லை. சாட்பாட்கள் பயன்பாட்டைக் கைவிட வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஆனால், சாட்பாட்கள் செயல்படும் விதத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.
மனிதர்களைப் போலவே உரையாடும் தன்மை கொண்ட மென்பொருள் அமைப்புகள் சாட்பாட்கள் எனப்படுகின்றன. ஏஐ நுட்பமே மனிதர்களுடன் உரையாடி பதில் அளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. எனினும் உரையாடும் திறனைப் பெற்றிருப்பதாலேயே ஏஐ சாட்பாட்களை அறிவாற்றல் கொண்டவையாகவோ மனிதர்களுக்கு நிகரானவையாகவோ கருதிவிடக் கூடாது.