தாவணி போட்ட தீபாவளி...

தாவணி போட்ட தீபாவளி...
Updated on
1 min read

செ

ன்ற தலைமுறைவரை இளம் பெண்களின் தேசிய உடையாக இருந்தது, தாவணி. குறிப்பாகத் தமிழக இளம்பெண்கள், பதின்ம வயதில் பாவாடை, தாவணி அணிவதும், 20 வயதைக் கடந்த பிறகு சேலைக்கு மாறுவதும் வழக்கமாக இருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்குக்கூடப் பாவாடை, தாவணியோடுதான் இளம்பெண்கள் சென்றுகொண்டிருந்தனர். 1990-களின் இறுதிவரை பல மகளிர் கல்லூரிகளில் இளம்பெண்களின் எழுதப்படாத ‘உடை விதி’யாகத் தாவணிதான் இருந்தது.

இளம்பெண்கள் முதலில் தாவணி அணியக் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டமாகச் சேலையுடுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், கலாச்சாரம் மாறிய வேளையில் உடைத் தேர்வும் மாறத் தொடங்கியது. நவநாகரிக உடைகள் பெரிதாக அறிமுகமான பிறகு, அந்த உடைகளின் மீது இளம்பெண்களின் பார்வை திரும்பியது. பாவாடை, தாவணிக்குப் பதிலாக சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகள் இளம் பெண்களின் மனதைக் கவர்ந்தன. உடலை முழுவதும் மறைக்கும் புதிய உடைகள் ஒரு வகையில் இளம்பெண்களுக்கு சவுகரியமாகவும் இருந்தன.

அதையடுத்துப் பாவாடை, தாவணிக்கு விடைகொடுத்த இளம்பெண்கள், புதிய உடைகளின் மீதும் மோகம் கொண்டனர். இதனால் தாவணிக்குக் கிராமங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக மவுசு குறையத் தொடங்கியது. இன்றைக்கோ ஜீன்ஸ், டீசர்ட், மிடி என இளம்பெண்களின் உடை மோகம் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் பாவாடையும் தாவணியும் பரண் ஏறிவிட்டன. விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சேலை அணிய சிலர் தயாராக இருந்தாலும், இளம்பெண்களிடையே தாவணி அணியும் ஆர்வம் குறைந்திருக்கிறது.

பழமையைக் கொண்டாடும் மனநிலை பலவற்றிலும் அதிகமாகியிருப்பது, இளம்பெண்களின் உடையிலும் தற்போது பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. சமீப ஆண்டுகளாகப் பாவாடை, தாவணி கலாச்சாரமே பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், எங்கே இந்த உடை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என்று தோன்றியது. ஆனால் பாவாடை, தாவணி மீது இளம்பெண்களுக்குச் சற்று ஈர்ப்பு திரும்பத் தொடங்கியிருக்கிறது. கோயில், திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் இளம்பெண்களைப் பாவாடை, தாவணியில் பார்க்க முடிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in