

உ
லகில் தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல, செயற்கைக்கோள்கள் மூலமாக விண்வெளி மூலமும் தகவல்தொடர்பு எனத் தொழில்நுட்பம் வேகமெடுத்துக்கொண்டிருக்கும் காலம் இது. அதை மெய்ப்பிக்கும்விதமாக கடலுக்கு அடியிலும் தகவல் தொடர்பைச் சாத்தியப்படுத்தும் முயற்சியில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஃபேஸ்புக் நிறுவனமும் வெற்றியைத் தொட்டிருக்கின்றன.
அமெரிக்காவுக்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் இடையேயான அட்லாண்டிக் பெருங்கடலில், 17 ஆயிரம் அடி ஆழத்தில் 6,600 கிலோ மீட்டர் நீளத்துக்குத் தகவல் பரிமாற்றத்துக்கான ஹைடெக் கேபிள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கேபிளுக்கு மரியா (Marea - ஸ்பெயின் மொழியில் கடல் அலை) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு விநாடியில், 160 டெரா பைட் தகவலைக் கடத்தும் திறன் பெற்ற இது, 7.1 கோடி HD திரைப்படங்களுக்கு சமமானது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 7.1 கோடி பேர் தாங்கள் விரும்பிய HD படங்களை ஒரு விநாடியில் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். உலகில் ஒட்டுமொத்தமாக உள்ள HD படங்களைக் கணக்கிட்டால்கூட அவற்றின் எண்ணிக்கை 7 கோடி இருக்குமா என்பதெல்லாம் தனிக்கதை.
இதற்கு முன்பு கடலுக்கு அடியில் இதுபோன்ற தகவல் பரிமாற்ற கேபிள்கள் அமைக்கப்படவில்லையா என நீங்கள் கேட்கலாம். ஜப்பானுக்கும் அமெரிக்காவின் மேற்கு கரைக்கும் இடையே 9,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூகுள் நிறுவனம் ஏற்கெனவே தகவல் தொடர்பு கம்பி வழித்தடத்தைக் கடலுக்கு அடியில் உருவாக்கியுள்ளது. ஆனால், இதன் வேகம் 60 டெரா பைட் மட்டுமே. இதுபோல் பத்துக்கும் அதிகமான தகவல் தொடர்பு கேபிள்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் தகவல் பரிமாற்றத்துக்காகக் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் கூட்டாக உருவாக்கியுள்ள மரியா கேபிளின் தகவல் பரிமாற்றத் திறனுக்கு ஈடு இணை வேறு இல்லை. உலக அளவில் இதுதான் இன்றைய நிலையில் அதிவேகத் தகவல்பரிமாற்ற கேபிள்.
சரி, மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு என்ன லாபம்? மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஃபேஸ்புக் நிறுவனமும் தங்களுடைய வேலையை மரியா கேபிள் மூலம் அடுத்தகட்டத் தொழில்நுட்பத்துக்கு மேம்படுத்த முடியும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட மரியா கேபிள் கட்டுமானப் பணிகள் தற்போது முடிந்துவிட்டன. ஆனால், இந்த கேபிள் வழியாக 2018 ஜனவரிக்குப் பிறகுதான் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.
சமூக வலைதள யுகத்தில் ‘மரியா’ ஒரு தலைகீழ் மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.