

கிரிக்கெட் உலகின் கடந்த வார ஹாட் டாபிக் கவுதம் கம்பீர் - விராட் கோலியின் மோதல். முன்னாள், இந்நாள் வீரர்களின் இந்தச் செயல்பாடுகள், இந்தியாவையும் தாண்டி கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று, மக்களவை எம்.பி.யாகி, பயிற்சியாளர் நிலைக்கு வந்துவிட்ட கவுதம் கம்பீரும்; சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாகவும் தற்போது ஒரு மூத்த வீரராகவும் விளையாடிக்கொண்டிருக்கும் விராட் கோலியும் மைதானத்தில் நடந்துகொண்ட விதம் ‘ஜென்டில்மேன்’ விளையாட்டைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது!
தண்டனை போதுமா? - ஒரு விளையாட்டு என்றால் ஆக்ரோஷம், ஆர்ப்பரிப்பு, கோபா வேசம், வார்த்தைப் பரிமாற்றங்கள் எல்லாமே இருக்கும். களத்தில் இப்படிக் கலவையான உணர்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டு எந்த ஒரு வீரராலும் விளையாட முடியாது. அதுவும் பரபரப்பு, விறுவிறுப்பு, அதிரடிக்குப் பஞ்சமில்லாத டி20 போட்டிகளில் இந்த உணர்வுகளை நிச்சயம் புறந்தள்ளிவிட முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் இந்த உணர்வுகள் எல்லாமே போட்டி முடிந்த பிறகே வெளிப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மைதானத்தில் நடந்த அந்த உரசல் விவாதமாகி இருக்கிறது.
லக்னோவில் நடைபெற்ற போட்டிக்கு இடையே லக்னோ அணியின் இளம் வீரரான நவீன் உல்ஹக்கிற்கும் பெங்களூரு அணியின் மூத்த வீரரான விராட் கோலிக்கும் நடந்த வார்த்தைப் பரிமாற்றங்கள், களத்தில் வெளிப்பட்ட ஆக்ரோஷம், போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீரும் கோலியும் மோதிக்கொள்ளும் அளவுக்கு வெடித்திருக்கிறது. நேரடியாக மோதிக்கொள்ளும் அளவுக்கு இருவரும் ‘அக்னி நட்சத்திர’மாக மாறியதுதான், ‘ஜென்டில்மேன்’ விளையாட்டின் ஆன்மாவை அசைத்துப் பார்த்திருக்கிறது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு கம்பீர், கோலி, நவீன் உல்ஹக் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது அபராதத்தோடு முடிந்திருக்க வேண்டிய தண்டனை அல்ல. குறைந்தபட்சம் ஒரு சில போட்டிகளுக்காவது தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் இதைத்தான் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், வணிக நோக்கம் கொண்ட ஐ.பி.எல்.லில் இதுபோன்ற தண்டனைகளை எதிர்பார்ப்பது சாத்தியம் இல்லைதான்.
தொடரும் மோதல்: கம்பீர் - கோலி இடையேயான மோதல் புதிதல்ல. லக்னோவுக்கு முன்பாக பெங்களூருவில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் முடிவும் இந்த மோதலுக்கு ஒரு காரணமே. பரபரப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியின் கடைசி பந்தில் லக்னோ அணி வெற்றி பெற்றதும், அந்த அணி வீரர்கள் காட்டிய ஆவேசமும், அதுவரை பெங்களூரு வெற்றி பெறும் என ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பெங்களூரு ரசிகர்களை நோக்கி, வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி கம்பீர் சைகை செய்ததும் நடந்தேறியது.
அதன் தொடர்ச்சியாகவே, லக்னோவில் வேறு வடிவத்தில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் கோலி. குறிப்பாக, இந்தப் போட்டியில் லக்னோவின் ஒவ்வொரு விக்கெட் வீழ்ச்சியின்போதும் கோலி வெளிப்படுத்திய உடல்மொழியும் கொண்டாட்டமும் அதிகப்படியாகவே இருந்தது.
இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டில் கொல்கத்தாவுக்காக விளையாடிய கம்பீரும் பெங்களூருவுக்காக விளையாடிய கோலியும் மோதிக்கொண்ட நிகழ்வும் நடைபெற்றிருக்கிறது. இந்த சீசனிலேயே டெல்லிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு அந்த அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலியுடன் கோலி கை குலுக்காமல் சென்றதும் சர்ச்சையானது.
இந்திய அணியின் கேப்டன் பதவி பறிபோனதற்கு கங்குலியே காரணம் என்று நினைக்கும் கோலி, ‘ஸ்போர்ட்மேன்ஷிப்’பாக கருதப்படும் கை குலுக்கல் நிகழ்விலும்கூட அதை வெளிப்படுத்தியதாகவே கருதப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கம்பீர் - கோலி இருவருமே சண்டைக் கோழிகளாக அறியப்பட்டவர்கள்தாம். ஆனால், உள்ளூரில் நடைபெறும் ஐ.பி.எல்.லிலும் அதை அவர்கள் நடத்திக்காட்டியிருப்பதற்கு நியாயம் சேர்க்க முடியாது. வளர்ந்து வரும் ஒரு இளம் வீரர் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருந்தால், முதிர்ச்சியின்மையைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், சர்வதேச அரங்கிலும் ஐ.பி.எல்.லிலும் நீண்ட அனுபவம் பெற்ற கோலியின் முதிர்ச்சியின்மை, அவருடைய கிரிக்கெட் பயணத்துக்கு அழகு சேர்க்காது.
பின்னாளில் வெட்கம்: அரவணைத்து செல்லும் வயதுக்குவந்ததோடு, பயிற்சியாளர் நிலையி லிருக்கும் கம்பீரின் செயல்பாடு இதன்மூலம் சொல்ல வருவது என்ன? அதே நேரம், கிரிக்கெட்டின் ‘லெஜெண்ட்’டாக கருதப்படும் விராட் கோலியை வழிகாட்டியாகக் கோடிக்கணக்கான சிறார்களும் இளைஞர்களும் பின் தொடர்கிறார்கள்.
ஒரு திறமையான வீரரிடமிருந்து, அவருடைய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள அவரைப் பின்தொடர்வோர் விரும்பு வதைப் போலவே, விரும்பத்தகாத செயல்களையும் பின்தொடர மாட்டார்களா? கிரிக்கெட்டர்களை கடவுளர் அளவுக்கு நேசிக்கும் ரசிகர்கள் உள்ள நாட்டில், விரும்பத்தகாத நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதையும் விமர்சனங்களில் அடிபடுவதையும் பற்றி கோலி இனியாவது சிந்திக்க வேண்டும்.
2008 ஐபிஎல் விளையாட்டின்போது மைதானத்தில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் ‘பளார்’ விட்ட ஹர்பஜன் சிங், தற்போது அரங்கேறிய கோலி - கம்பீர் மோதலை விமர்சித் திருக்கிறார். அதோடு ஸ்ரீசாந்த்தை அறைந்ததற்காக வெட்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார். ஆம், மைதானத்தில் அத்துமீறினால் பின்னாளில் அதற்கு வெட்கப்படத்தான் வேண்டி யிருக்கும்.
அடடே கம்பீர் - கோலி: கம்பீர் - கோலி மோதலுக்கு மட்டுமல்ல சிறந்த நிகழ்வுகளுக்காகவும் நினைவுக்கூரப்படுபவர்கள்தாம். 2009இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய செஞ்சுரிக்காக வழங்கப்பட்ட சிறந்த ஆட்டக்காரர் விருதை, அதே போட்டியில் தன்னுடைய சர்வதேச முதல் செஞ்சுரியை அடித்த கோலிக்காக கம்பீர் விட்டுக் கொடுத்த நிகழ்வும் நடந்திருக்கிறது.
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கம்பீரும் கோலியும் அமைத்த 83 ரன் பார்ட்னர்ஷிப், வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. அதையும் தாண்டி இருவருமே டெல்லி வீரர்கள். இருவருக்கும் இப்படி நெருக்கமான அம்சங்கள் இருந்தும், அவற்றை ஐ.பி.எல். நிகழ்வுகள் மறக்கடிக்க வைத்தது துரதிர்ஷ்டவசமே.
- karthikeyan.di@hindutamil.co.in