தமிழில் பேசாவிட்டால் என்ன நடக்கும்?
ஆங்கில மோகத்தால் தமிழ் மொழியை மறந்தால், வருங்காலத்தில் தமிழர்கள் திருக்குறள் புத்தகத்தையே தேட வேண்டியிருக்கும் என்பதைக் கற்பனையும் நகைச்சுவையும் கலந்து ‘ப்ரோ, கொஞ்சம் தமிழ்ல பேசுங்க’ என்ற நாடகம் ‘தி இந்து’வின் ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டமான ‘யாதும் தமிழே’ நிகழ்வில் அரங்கேற்றப்பட்டது.
‘தியேட்டர்காரன்’ நாடகக் குழுவினரின் சார்பில் சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி கலையரங்கத்தில் இந்த நாடகம் நடைபெற்றது. இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்துவரும் ஆங்கில மோகத்தின் விளைவு எப்படியிருக்கும் என்பதை இந்நாடகம் நகைச்சுவையாக விளக்கியது. இந்த நாடகக் குழுவை உருவாக்கியவர்களில் ஒருவரான ஸ்ரீராம் இயக்கிய இந்நாடகம் தமிழில் பேசவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
இந்த நாடகத்தில் தமிழ்நாட்டில் சமோசா விற்பவர், சுமை தூக்குபவர், துப்புரவாளர் போன்ற சமானியர்களும் தமிழ் மொழியை மறந்து ஆங்கிலத்தில் பேசுகின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆங்கிலப் பாடலுக்கு நடனமாடுகின்றனர். தற்போது நிலவும் ஆங்கில மோகம் தொடர்ந்தால், இப்படிப்பட்ட சூழல்தான் வருங்காலத்தில் உருவாகும் என்பதை நாடகத்தின் தொடக்கத்தில் இடம்பெற்ற இந்தக் காட்சிகள் விளக்கின.
‘தமிழ்புரம்’ என்ற கற்பனை ஊரில் இருக்கும் தமிழ்ப் பள்ளிக்கு திருக்குறள் புத்தகத்தைத் தேடி வருகிறான் ஹாரிஷ். அந்தப் பள்ளியில் நடக்கும் நகைச்சுவை நிகழ்வுகளால் இந்த நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பள்ளியில் கோலிவுட் இயக்குநர் பாலா, நடிகர்கள் கணேஷ், ரகுவரன் போன்றோர் தமிழ் ஆசிரியர்களாக இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் தமிழ்க் கற்றுகொடுத்தால் எப்படியிருக்கும் என்பதை நகைச்சுவையுடன் மேடையில் அரங்கேற்றினர் இந்நாடகக் குழுவினர். இந்த நாடகத்தில் திருவள்ளுவரும் ஒரு கதாபாத்திரமாக வந்தது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
