

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கூவம் போன்ற மாசடைந்த ஒரு கால்வாயில் ஜோடிகள் எடுத்த ‘ப்ரீ வெட்டிங்’ ஒளிப்படங்கள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால், அப்படி நிச்சயிக்கப்படுகிற திருமணம், ‘ப்ரீ வெட்டிங்’ ஷூட் என்கிற பெயரில்தான் தொடங்கவே செய்கிறது. அந்த வகையில் கூவம் போன்று காணப்படும் மாசடைந்த கால்வாயில் இறங்கி போட்டோஷுட்டை நடத்தியிருக்கிறார்கள் சில ஜோடிகள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த ‘ப்ரீ வெட்டிங்’ ஒளிப்படங்கள் இணையத்தில் தற்போது திடீரென வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாகத் திருமணத்துக்கு முன்பாக எடுக்கப்படும் ‘ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஷுட்’ கலாச்சாரம் பெருகிவிட்டது. சில நேரத்தில் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இந்த ஒளிப்படங்கள் இருப்பதும் உண்டு.
இதில் அந்தரங்கத்தையும் வெட்டவெளிச்சமாகப் படம் பிடிக்கும் அளவுக்கு இந்தப் போக்கு மாறிவருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் இதையும் திருமணத்தின் ஒரு பகுதியாக மாற்றிவருகிறார்கள்.
இப்படியான ‘ப்ரீ வெட்டிங்ஷுட்’ ஒளிப்படங்கள் ஒருபுறம் இருக்க, மலையின் உச்சி, கொட்டும் அருவி என ஆபத்தை உணராமல் ஒளிப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்துகின்றனர். இதுபோன்ற தருணங்களில் தங்கள் பாதுகாப்பையும்கூட மறந்துவிடுகிறார்கள்.
கடந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள இருந்த மைசூரைச் சேர்ந்த இளம் ஜோடி, இவ்வாறான போட்டோஷுட்டில் காவிரி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
முன்பு மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படும் திருமணங்களில்தான் இப்படிப்பட்ட ‘ப்ரீ வெட்டிங்ஷுட்’கள் இடம்பெறும். ஆனால், தற்போது பெருவாரியான திருமணங்கள் ‘ப்ரீ வெட்டிங்ஷுட்’ இல்லாமல் நிறைவு பெறுவதில்லை.
- ரா. மனோஜ்