

ஒரு நாட்டின் கடந்த காலத்தைச் சொல்வதுடன், அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் காட்டும் ஒரு மாயக் கண்ணாடிதான் வரலாறு. ஆனால், இந்தியாவின் வரலாறு 1947 உடன், அதாவது நாடு விடுதலை பெற்றவுடன் முடிந்துவிடுகிறது. அதன் பிறகான இந்திய வரலாற்றை பொதுத்தளத்தில் பதிவுசெய்ய பெரிதாக யாரும் முன்வரவில்லை. அப்படியே வந்தாலும், அவர்களுக்கான பாதைகள் மறுக்கப்படுகின்றன. ஆனால், சமகால இளைஞர்களுக்கு அப்படிப்பட்ட தடைகளை மீறுவதிலும் கட்டுடைப்பதிலும் அலாதிப் பிரியம். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் அமர் பாரி, தோமார் பாரி, நக்சல்பாரி என்கிற இந்த கிராஃபிக் நாவல்.
தமிழில் ‘விலங்குப் பண்ணை’ என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘அனிமல் ஃபார்ம்’ என்ற அரசியல் பகடிக் கதையை நினைவூட்டும் வகையில்தான் இந்த கிராஃபிக் நாவல் தொடங்குகிறது. ஒரு பண்ணையில் இருக்கும் விலங்குகள், வெளியே ஏதோ பதற்றமான சூழல் நிலவுவதை உணர்கின்றன. அப்போது அங்கே வரும் ஆந்தையாரிடம் இதைப் பற்றி விசாரிக்கின்றன. வெளியில் மாறிவரும் அரசியல் சூழலைப் பற்றி ஆந்தையார் அரசியல் பாடமெடுப்பதைப் போல நமக்கு வரலாற்றுப் பாடமெடுக்கிறார் சுமித்.
நிலப்பிரபுத்துவம் தலைவிரித்தாடிய ஜமீன்தார் சமூகத்தைப் பற்றிய விரிவான அறிமுகத்தோடு கதை ஆரம்பிக்கிறது. மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றிய ஒரு தீப்பொறி, எப்படி விரைவில் காட்டுத்தீயாகப் பரவியது என்பதை அழகாக, வரிசையாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இந்திய கம்யூனிச வரலாற்றின் இரண்டு படிகளைப் புத்தகத்தின் இரண்டு பாகங்களில் நகைச்சுவை கலந்து, சமகால இளைஞர்கள் படிக்கும் வகையில் தந்திருப்பதுதான் இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு.
கம்யூனிச இயக்கத்தின் தோற்றத்தைப் பற்றியும் அதன் சமகால மாவோயிஸச் சித்தாந்தங்களைப் பற்றியும் பல உதாரணங்களுடனும் தரவுகளுடனும் சுமித் விளக்குகிறார். ஒரு வரலாற்றைப் படிக்கிறோம் என்ற உணர்வு வராமல், தெளிவான ஆதாரங்களுடன் சுவாரசியமாகத் தொகுத்திருக்கிறார். குறிப்பாக, சமகால வாசகர்களுக்காக சாரு மஜூம்தாரை அறிமுகப்படுத்தும்போது மிலிந்த் சோமனைப் போல இருப்பவர் என்ற உதாரணமும் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சம்பவங்களைத் தொகுத்த விதமும் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தைத் தருகின்றன.
சமகால பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது, ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய நிலப்பிரபுத்துவம், இப்போது எப்படி கார்ப்பரேட் கலாச்சாரமாக மாறியிருக்கிறது என்பதை வேதாந்தா குழுமம், ஜிண்டால் குழுமம், கர்நாடகா பெல்லாரி சகோதரர்கள் ஆகியோரை வைத்து விளக்கியிருக்கிறார்.
மிகவும் கவனமாகப் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஏனென்றால், புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், ஏன் ஒவ்வொரு ஓவியத்திலுமே ஏதோ ஒரு குறியீட்டை, பகடியை சுமித் வைத்திருக்கிறார். உதாரணமாக, மாவோயிஸ ஆதிக்கம் உள்ள இந்தியாவின் மத்தியில் உள்ள தண்டகாரண்ய காட்டுப்பகுதியைச் சுற்றிப் பார்க்க அமெரிக்கப் பயணக்குழு ஒன்று வர, அவர்களுக்கு வழிகாட்டவரும் போலீஸ்காரர், அப்பகுதி பழங்குடி இனச் சிறுவனை வார்த்தைக்கு வார்த்தை ‘மோக்லி’ என்றுதான் அழைக்கிறார். இதுபோல மன்மோகன் சிங், இந்திரா காந்தி என்று இந்த கிராஃபிக் நாவலில் பகடி செய்யப்பட்டவர்கள் ஏராளம். இந்த கிராஃபிக் நாவலுக்காக தன்னுடைய ஓவிய பாணியில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்திருக்கிறார், சுமித். இந்தியாவின் முதல் கிராஃபிக் நாவலை எழுதிய ஓரிஜித் சென்னின் ஓவிய பாணியைப் பின்பற்றியது முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணக்கலவைவரை நிறைய புதுமைகளைச் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் மேசை, ஹெல்மெட் போன்ற பல பொருட்களை வரையாமல், அப்படியே போட்டோவாகவே ஓவியத்தில் நுழைத்திருக்கிறார். பொதுவாக ஒவ்வொரு ஓவியக் கட்டத்துக்கும் வரையப்படும் எல்லைக்கோடுகளை வரையாமல், நிறைய வண்ணங்களைச் சேர்க்காமல் நவீன வடிவத்தில் இந்த கிராஃபிக் நாவலைக் கொடுத்திருக்கிறார்.
நம் தலைமுறைக்கு ஒரு தீவிர அரசியல் சார்ந்த விஷயத்தை எப்படி வரலாறாகத் தர வேண்டுமென்பதற்கு சுமித் குமாரின் கிராஃபிக் நாவல் அருமையான உதாரணம். நம் தலைமுறைப் போராளிகள் பேசத் தயங்கும் விஷயத்தைச் சொல்வதில் தொடங்கி, குறிப்பிட்ட சில நிறுவனங்களை ஆதரித்து ஊடகங்கள் எடுக்கும் நிலைப்பாடுவரை அனைத்தையும் மிகவும் பகடி செய்து சுமித் ஆவணப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் பேசாப் பொருளைப் பேசுவது என்ற சமகால சித்தாந்தத்துக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் சுமித்.