

வலைப்பூ, சமூக வலைத்தளங்களில் எழுதத் தொடங்கித் தற்போது தனி வாசகர் வட்டத்தை இளம் படைப்பாளர்கள் சிலர் உருவாகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் கவனிக்க வைக்கும் இளம் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் இவர்கள்.
l றாம் சந்தோஷ்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த றாம் சந்தோஷின் இயற்பெயர் சண்முக. விமல் குமார். இயற்பெயர், புனைபெயர் என இரண்டு பெயர்களிலும் எழுதிவரும் இவர், தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் முதுகலை படிப்பை முடித்தவர். ‘நச்சினார்க்கினியரின் தொல்காப்பியக் கோட்பாடு’ என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவருகிறார். 2018இல் எழுதத் தொடங்கினார்.
‘சொல் வெளித் தவளைகள்’, ‘இரண்டாம் பருவம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், தெலுங்குவழித் தமிழில் ‘கண்ணீரின் நிறங்கள்’ என்கிற மொழிபெயர்ப்பு நூலையும், ‘தொல்காப்பிய வழித் திறனாய்வு’ (ஐந்து பயனாக்கக் கட்டுரைகள்) என்கிற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார். இவரது சில கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
l இவான் கார்த்திக்: நாகர்கோவிலைச் சேர்ந்த ஹரி குமார் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர். சிறு வயது முதல் புத்தக வாசிப்பு நேசிப்பாளரான இவர், ‘இவான் கார்த்திக்’ என்கிற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். மின்னிதழ்களில் பல சிறுகதைகளை எழுதியவரது முதல் நாவல் ‘பவதுக்கம்’, 2022இல் வெளியானது.
இவர், மனிதர்களின் வாழ்க்கை முறையைத் தழுவி கதைக்களம் உருவாக்குவதில் நாட்டம் கொண்டவர். வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற முதல் நாவலை அடுத்து இரண்டாவது நாவலுக்கான எழுத்து வேலைகளைத் தற்போது மேற்கொண்டுள்ளார்.
l மித்ரா அழகுவேல்: சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் மித்ரா அழகுவேல். தேனியைப் பூர்விகமாகக் கொண்ட அவர், சென்னையில் பணியாற்றிவருகிறார். புத்தக வாசிப்பில் கிடைத்த அனுபவத்தால் தானும் ஓர் எழுத்தாளராக வேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதத் தொடங்கியவர்.
இதுவரை ‘முற்றா இளம்புல்’, ‘மின்னவிர் பொற்பூ’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், ‘கார்மலி’ என்கிற சிறுகதைத் தொகுப்பையும் படைத்துள்ளார். பெண் மையக் கதைகளைக் கொண்ட ‘கார்மலி’, வாசகர் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்குத் திரைக்கதையும் எழுதிவருகிறார்.
எழுத்துப் பயணத்தைத் தொடங்குவதற்கு வாசிப்புப் பழக்கம்தான் உந்துதலாக இருந்ததாக ஒருமித்தக் குரலில் இந்த இளம் எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். ஒரு முறை வாசிக்கப் பழகிவிட்டால் அவ்வளவு எளிதில் அப்பழக்கம் விட்டு விலகாது. நூல்களோ இணையவழி மின் படிகளோ அவரவர் விருப்பத்துக்கேற்ப வாசிப்பைப் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இனியும் தாமதிக்காமல் வாசிப்பை நேசிக்கத் தொடங்குவோம்.