

இனி வருங்காலம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) காலம் என்றாகிவிட்டது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்னும் நிலைக்கு வந்துவிட்டோம். சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான போலிச் செய்திகள் தினந்தோறும் வந்து குவிகின்றன. போட்டோஷாப் எனும் மென்பொருள் மூலம் எடிட் செய்து திரித்துப் போலியான செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.
என்றாலும், அவற்றின் நம்பகத்தன்மையைக் கண்டறியும் இணையதளங்களின் உதவியுடன் ஓரளவுக்குச் சரியான செய்திகளையும் போலியான செய்திகளையும் நம்மால் ஆராய்ந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதிலும் ஏ.ஐ.-யைப் போலிகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கினால், மின்னணு உருவப்படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது என்று அலாரம் அடிக்கிறார்கள் தொழில்நுட்ப நிபுணர்கள்.
ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒளிப்படங்கள் இணையதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அதில் சமீபத்திய வரவாக உலகின் செல்வாக்குமிக்க நபர்கள், கோடீஸ்வரர்கள் ஆகியோர் ஏழ்மை நிலையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து, ஏ.ஐ. உதவியுடன் அதற்கு உருவமும் கொடுத்திருக்கிறார்கள்.
டொனால்டு ட்ரம்ப், முகேஷ் அம்பானி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் போன்ற போன்றவர்கள் வறுமையில் வாடுவதுபோல் ஏ.ஐ. உதவியிடன் சித்தரித்திருக்கிறார்கள்.
இப்படியே போனால் யாரை வேண்டுமானாலும் எப்படியும் சித்தரிக்கலாம் என்கிற நிலை உருவாகலாம். அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் திரைக்கதை, வசனம், இசை, காட்சிகளின் பின்னணி ஆகியவற்றைக் கொடுத்தால் ஏ.ஐ. உதவியுடன் தேவையான காட்சியையே எடுத்துவிடலாம் என்னும் நிலை வந்தாலும் வரலாம். யார் கண்டது!
- ரா. மனோஜ்