

இன்று சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக யூடியூபர்களும் புகழ்பெற்றுவருகிறார்கள். யூடியூப் மூலம் கோடியில் புரளும் யூடியூபர்களும் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் லைக்ஸ்களும் ஷேர்களும்தான் யூடியூபர்களின் வளர்ச்சிக்கு முக்கியம்.
அதைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் யூடியூபர்கள் பெருகிவருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் புகழ்பெற்ற ‘மிஸ்டர் பீஸ்ட்’ என்கிற யூடியூப் அலைவரிசையை நடத்திவரும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் தன்னுடைய விலை உயர்ந்த சொகுசு காரை ஹோட்டல் சர்வருக்கு டிப்ஸாகக் கொடுத்து வியப்பூட்டியிருக்கிறார்.
அண்மையில் ஜிம்மி டொனால்ட்சன் ஹோட்டலுக்குச் சென்றார். தனக்கு உணவு பரிமாறிய பெண் சர்வரிடம், ‘இதுவரை அதிகபட்சமாக எவ்வளவு டிப்ஸ் வாங்கியிருக்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண், ‘50 டாலர்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே தன்னுடைய கார் சாவியை எடுத்து அந்தப் பெண்ணிடம் தந்த டொனால்ட்சன், ‘இதை டிப்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூற, அந்தப் பெண் திக்குமுக்காடிப் போனார்.
40 விநாடிகளுக்கு மேல் ஓடும் இந்தக் காணொளியை டிக்டாக்கில் டொனால்ட்சன் வெளியிட்ட பிறகு, இந்த விவரம் தெரிய வந்தது. இந்தக் காணொளி இணையத்தில் கண்டபடி வைரலாக, அமெரிக்காவில் டொனால்ட்சன்னை ஒரு தரப்பு புகழ்ந்து தள்ளி வருகிறது. என்றாலும் தற்பெருமைக்காகவே முன்கூட்டியே வீடியோகிராபருடன் சென்று, இவற்றை டொனால்ட்சன் காட்சிப்படுத்தியிருப்பதாக இன்னொரு தரப்பு சாடியும் வருகின்றன. இதுபோன்ற யூடியூபர்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே இருக்கிறார்கள். யூடியூப் யுகம் அவர்களை அப்படி மாற்றியிருக்கிறது.