

ஒ
ரே பாட்டில் பிறந்த குழந்தை கதாநாயகனாக வளர்ந்துவிடுவதையும், கூலித் தொழிலாளியான கதாநாயகன் கோடீஸ்வரனாக மாறிவிடுவதையும் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். அதேபாணியில் ‘ஜிமிக்கி கம்மல்’ என்கிற மலையாளப் படப் பாடலுக்குக் குத்தாட்டம் போட்ட பெண்களில் ‘ஷெரில்’ என்பவர் மட்டும் ‘ஓவர் நைட்டில் ஒபாமா’ ஆகிவிட்டார். அந்தப் பெண்ணுக்குச் சமர்ப்பண மீம்ஸ் போடுவதில் தொடங்கி ரசிகர் படை திரள்வதுவரை நம் இளைஞர்கள் இன்னும் ஜிமிக்கி கம்மலை விட்டப்பாடில்லை.
‘நாங்களும் ஆடுவோம்ல!’ எனப் பையன்களும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்குக் களமிறங்கினார்கள். சும்மா சொல்லக் கூடாது, அவர்களுடைய ஆட்டமும் யூடியூபில் ஹிட் அடித்தது. முதல் சில நாட்கள்வரை கடவுள் தேசத்தின் சேச்சிகளும் சேட்டன்களும் ஜிமிக்கி கம்மலுக்கு ஆடித்தீர்த்தார்கள். அடுத்துக் களமிறங்கினார்கள் தமிழ் ‘வீடியோ மீம்ஸ்’ மன்னர்கள். ‘வடிவேலு வெர்ஷன்’, ‘கவுண்டமணி வெர்ஷன்’ என ஆளாளுக்கு அசத்தினார்கள். அதிலும் சீமான் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளை வெட்டியும் ஒட்டியும், விஜயகாந்தின் யோகா ஆசனங்களையே நடனமாக்கியும், தோடர் பழங்குடியினருடனான ஸ்டாலினின் நடனத்தைக் கச்சிதமாகப் பொருத்தியும், ‘அம்மா’வின் சமாதியில் ‘சின்னம்மா’ அடித்த சத்திய சபதத்தையும் கலந்துகட்டி கிண்டல் வீடியோ மீம்ஸ் போட்டு வயிறு குலுங்கச் சிரிக்கவைத்தார்கள். இதில் எம்.எஸ். டோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரையும் விட்டுவைக்கவில்லை நம்மவர்கள்.
இப்படியொரு வைரல் வரவேற்பை இப்பாடல் இடம்பெற்ற ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ குழுவினர்கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதனால்தான், “ஜிமிக்கி கம்மல் பாடலை அதிரடி ஹிட் ஆக்கிய அனைவருக்கும் நன்றி” என்று ஆடியபடியே நடிகர் மோகன்லால் நன்றி சொன்னார். அதையும் யூடியூப்பில் ரசித்துத் தீர்த்தார்கள்! விதவிதமான ‘ஜிமிக்கி கம்மல்’ வெர்ஷன்கள் சமூக ஊடகங்களில் வலம்வர, கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 11 அன்று நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரப் பாடலாகவும் ‘ஜிமிக்கி கம்மல்’ தற்போது மாற்றப்பட்டுவிட்டது.
பிரபல சினிமா பாடல்களை அரசியல் பிரச்சாரங்களுக்காக அப்படியே பயன்படுத்துவது அல்லது ரீமிக்ஸ் செய்து பயன்படுத்துவது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம்தான். இந்த முறை அதையும்தாண்டி அட்டகாசமாக உருமாற்றப்பட்டிருக்கிறது ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல். பெட்ரோல் விலை ஏற்றம், பண மதிப்பு நீக்கம் என மக்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளால் மொத்த நாடும் மோடி ஆட்சியில் படும்பாட்டை நையாண்டியாக ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலாக மிக்ஸ் செய்து எழுதியிருக்கிறார்கள். அப்துல்காதர் எழுதிய இந்தப் பாடலை ஃபஹாத், லில்லி பிரான்சிஸ் ‘அடிபொலி’யாக பாடியிருக்கிறார்கள். பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல மோடியின் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாடுகளில் அவர் மேளம், தாளம் என இசை வாத்தியங்களை வாசிக்கும் காட்சிகளைச் சேர்த்து ரகளையாகப் பாடலை வீடியோ பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள்.
‘ஜிமிக்கி கம்மல் எலக்ஷன் பேரடி’ என்ற இந்தப் பாடலையும் மூன்றே நாட்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள்.