

ஒ
ரு காலத்தில் பயணங்களில் பிரிக்க முடியாததாக இருந்தன டிரங்குப் பெட்டிகள். இன்றோ அவை அருங்காட்சியகக் காட்சி பொருள்கள்போல ஆகிவிட்டன. நம்மூரில்தான் டிரங்குப் பெட்டிகளுக்கு இந்த நிலைமை. ஆனால், வெளிநாடுகளில் டிரங்குப் பெட்டிகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறையவே இல்லை. இன்னும் பல வெளி நாடுகளில் டிரங்குப் பெட்டிகள் விற்பனை சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஷிவாஸ் ரீகல் என்ற நிறுவனம் ‘மேட் ஃபார் ஜென்டில்மேன்’ என்ற பெயரில் டிரங்குப் பெட்டியைத் தயாரிக்கிறது. இது ஒரு சொகுசு டிரங்குப் பெட்டி. ஓக் மரத்தில் இந்த டிரங்குப் பெட்டி செய்யப்படுகிறது. பாரம்பரிய வடிவமைப்பை மாற்றாமல் நேர்த்தியான வசதிகளுடன் இந்தப் பெட்டி தயாரிக்கப்படுவதுதான் இதன் சிறப்பு.
இப்போது உள்ள நவீனப் பெட்டிகளில் இருப்பதுபோல இதில் டிராலி வசதியும் உள்ளது. எனவே கையிலோ தலையிலோ தூக்கி வைத்துக்கொண்டு அலையத் தேவையில்லை. எளிதில் இழுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துவிட்டுப் பயணத்தில் மூழ்கலாம். இந்தப் பெட்டிக்குள் தண்ணீர், உணவு, துணிகள், கடிகாரம், ஷூ வைக்கக் கச்சிதமாக இடங்கள் உள்ளன. நவீன வசதிகளுடன் பாரம்பரிய முறையிலும் தயாரிக்கப்படும் இந்த டிரங்குப் பெட்டியின் விலை வெறும் 18 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர் மட்டுமே.
இங்கிலாந்தில் மட்டுமல்ல; இத்தாலியில் கையினால் இழைத்துச் செய்யப்பட்ட டிரங்குப் பெட்டிக்கும் வரவேற்பு அமோகமாக உள்ளதாம். குக்சி நிறுவனம் இந்த டிரங்குப் பெட்டியைத் தயாரித்திருக்கிறது. மர டிராயர், நகைகள் வைக்க லினன் துணி டிராயர் என இதில் வசதிகள் உள்ளன. பாதுகாக்கப் பிரத்யேகமான பூட்டு வசதியும் உண்டு. இந்த டிரங்குப் பெட்டியின் விலை 49 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்தான்.
காலம் கடந்தும், அசராத அழகுப் பெட்டிகள் இவை! விலைதான் வாயைப் பிளக்க வைக்கிறது.