

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் திறன்பேசியும் கையுமாகவே இருக்கிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினர் நள்ளிரவு தாண்டியும் திறன்பேசியில்தான் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிடுகிறார்கள். திறன்பேசி அடிமைகளாக மாறும் அளவுக்கு அது எல்லோருடைய வாழ்க்கை முறையையும் மாற்றிவிட்டிருக்கிறது.
திறன்பேசிகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதைக் குறைக்க வழி இல்லையா என்று நினைக்கிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதுபோன்றவர்களுக்கு ஆப்பிள் ஐபோன்களும் ஆன்ட்ராய்டு போன்களும் வழிகாட்டுகின்றன.
இதுபோன்ற திறன்பேசிகளில் ‘ஸ்கிரீன் டைம்’ என்கிற அம்சம் உள்ளது. இது திறன்பேசியைப் பயன்படுத்துபவர் எவ்வளவு நேரம் அதில் மூழ்கியிருக்கிறார் என்பதைக் கண்காணிக்கும். திறன்பேசியில் உள்ள செயலிகளில் ஒருவர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைக் கண்காணித்து, ‘ஸ்கிரீன் டைம்’ மூலம் தெரியப்படுத்திவிடுகிறது.
இதன் மூலம் நாம் திறன்பேசியை எவ்வாறு, எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக எந்தெந்த செயலிகளில் அதிக நேரத்தைச் செல்விடுகிறோம் என்பதையும் அறியலாம்.
உங்கள் திறன்பேசியில் அந்த அம்சம் இருந்தால் அதைப் பயன்படுத்திப் பாருங்கள். பிறகு நீங்களே திறன்பேசி பயன்பாட்டைக் குறைக்கும் முடிவுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.