

நிழல் தரும் மரங்களில் ஆணிகளை அடித்து விளம்பரங்களைச் செய்வோர் பலர். இன்னும் சிலர் மரங்களில்கூடத் தங்களது பெயரையோ, தங்களுக்குப் பிடித்தவர் பெயரையோ கீறிவைத்து மரத்தை அலங்கோலமாக்குவதும் உண்டு. இது போன்றவர்களுக்குத் தன்னுடைய செயல் மூலம் பதில் அளித்திருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓவியர் சஞ்சய் சர்கார்.
நடைபாதைச் சுவரில் வெள்ளை யடித்துவிட்டு நோட்டீஸ் ஒட்டாதீர் என்று எழுதிவைத்த அறிவிப்பை மறைத்தபடி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த் திருப்போம்.
அசுத்தம் செய்யாதீர் என்று எழுதி வைத்தால், அதைச் செய்துவிட்டுத்தான் பலர் மறுவேலை பார்ப்பார்கள். ஆனால், அதே சுவரில் கடவுளர் படங்களையோ, அழகான இயற்கைக் காட்சிகளையோ வரைந்தால் அந்தச் சுவரை விட்டுவிடுவார்கள்.
இதே உத்தியைத்தான் ஓவியர் சஞ்சயும் பின்பற்றியிருக்கிறார். மரங்களைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மரங்களில் விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த ஓவியங்களைத் தத்ரூபமாக இவர் வரைந்துவருகிறார். இதன் மூலம் மரங்கள் அழகாகவது மட்டுமன்றி சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்கிறார் அவர்.
நன்கு வளர்ந்த பெரிய மரங்களைத்தான் இதற்குப் பயன்படுத்துகிறார். மேலும் மரங்களைச் சேதப்படுத்தாமல் முப்பரிமாண முறையில் தன் கற்பனையையும் கலந்து ஓவியங்களை வரைந்துவருகிறார். மரங்களைப் பாழாக்காமல் நேசிக்க இப்படியும் ஒரு வழி இருக்கிறது.
- ரா. மனோஜ்