

‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கை ஓட்ட விரும்பாத பைக் பிரியர்களே இருக்க மாட்டார்கள். அமெரிக்காவில் 1903ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 120 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இன்றைய பைக் தயாரிப்புகளுக்கு முன்னோடியே ஹார்லி டேவிட்சன்தான்.
தற்போது இந்நிறுவனத்தின் புராணம் எதற்கு என்று நினைக்கலாம். இந்த நிறுவனம் 1908ஆம் ஆண்டில் தயாரித்த ஒரு பைக், அண்மையில் இந்திய மதிப்பில் ரூ. 7.8 கோடிக்கு ஏலம் போய் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பார்ப்பதற்கு இன்றைய சைக்கிள் வடிவில் இருக்கும் இந்த பைக், இவ்வளவு தொகைக்கு ஏலம் போயிருப்பதற்கு, அது ஹார்லி டேவிட்சன் பிராண்ட் என்பதும் ஒரு காரணம்.
சமைக்கும் ரோபாட்! - உலகில் புதுவிதமான ரோபாட்கள் பற்றிய அறிமுகங்கள் தொடர்ந்து அரங்கேறியவண்ணம் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மெக்டொனால்ட் நிறுவனம் புதிதாக ஒரு ரோபாட் ஹோட்டலைத் திறந்திருக்கிறது.
இந்த உணவகத்தில் சமைப்பதே ரோபாட்கள்தான். உணவை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் பணியையும் ரோபாட்களே செய்கின்றன. சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற பகுதிகளிலும் ஹோட்டல்களைத் திறக்க மெக்டொனால்ட் நிறுவனம் முடிவுசெய்திருக்கிறதாம். மனிதர்களின் வேலைகளுக்கு வைக்கப்போகுது உலை!