

கா
தலர் தினம் என்றாலே நமக்கெல்லாம் பிப்ரவரி 14-ம் தேதிதான் நினைவுக்கு வரும். ஆனால், சீனாவில் காதலர் தினம் என்றால் புத்தாண்டு பிறந்த 7-வது மாதத்தின் 7-வது நாள்தான் நினைவுக்கு வரும். ஏனென்றால், அன்றுதான் சீனாவில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தை ‘சீ ஷீ திருவிழா’ (Qi Xi Festival) என்றும் அங்கே அழைக்கிறார்கள். இந்த ஆண்டு காதலர் தினம் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் (28-ம் தேதி) சீனாவில் கொண்டாடப்பட்டது. இந்த சீனக் காதலர் தினத்துக்குப் பின்னணியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது.
நெசவு திறமைக்குப் புகழ்பெற்ற ஸின்யூ என்ற பெண் தெய்வம், பூவுலக்கு வரும்போது நியுலங் என்ற மாடு மேய்க்கும் இளைஞனிடம் காதல் வயப்பட்டாள். அவர்கள் இருவரும் காதல் மணம்புரிந்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர். இந்த விஷயம் தெரியவந்தவுடன், சொர்க்கத்தின் ராணியான ஸின்யூவின் தாய், அவளை மீண்டும் சொர்க்கத்துக்கே அழைத்துசென்றுவிடுகிறார். இதனால் நியுலங்கும் அவனுடைய குழந்தைகளும் மனமுடைந்துபோகின்றனர்.
இதன்பிறகு பறக்கும் காலணிகளின் உதவியோடு சொர்க்கத்துக்கு மனைவியைத் தேடிச் செல்கிறான் நியுலங். ஆனால், ஸின்யூவின் தாய் அவர்கள் சந்திக்க முடியாதவாறு, ஒரு பால்வெளியை உருவாக்கிவிடுகிறார். இந்தக் காதலர்களின் அழுகுரலைக் கேட்ட ‘வால்காக்கை’(magpie) பறவைகள், அவர்கள் பால்வெளியைக் கடக்கப் பாலத்தை அமைத்துகொடுத்தன. ஒருகட்டத்தில், ஸின்யூவின் தாய் காதலர்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் ‘சீ ஷீ’ தினத்தில் சந்திக்க சம்மதிக்கிறார். அந்தத் தினம் ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்கு பிறகு ஏழாவது மாதத்தில் 7-வது தினத்தில்தான் வரும். அப்படி அவர்கள் சந்தித்த நாளைத்தான் சீனர்கள் காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
சீனக் காதலர் தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் வண்ணமயமான கொண்டாட்டத்தில் மக்கள் திளைப்பார்கள். வயது வித்தியாசமின்றி பெண்களும், குழந்தைகளும், அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை ஆற்றில் விடுவார்கள். கியூஜோவ் என்ற இடத்தில் உள்ள பழமையான காதல் தேவன் கோயிலை நோக்கி, காதல் ஜோடிகள் ஏராளமானோர் சீன பாரம்பரிய உடையுடன் அணிவகுப்பார்கள். அங்கு காதலர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விளையாட்டுகளும் நடைபெறுவது வழக்கம்.