

பே
ப்பர் கப், பாக்கு மட்டைத் தட்டு என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வருவது எது? சூழல் காக்கும் மாற்றுப் பொருள் என்று சொல்வீர்கள். உண்மைதான். ஆனால், அந்த பேப்பர் கப், தட்டின் மூலம் ஒரு மரத்துக்கான விதையை சேர்க்கலாம் என்று நம்பிக்கை விதைக்கச் சொல்கிறார் விமலநாதன்.
விமலநாதன் காஞ்சிபுரம் மாவட்டம் திம்மையன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பொருள் அறிவியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆராய்ச்சி நேரம் போக எஞ்சிய நேரமெல்லாம் மரம் வளர்ப்புதான் இவரது விருப்பம்.
“இந்த இயந்திர வாழ்க்கையில் எல்லாப் பொருட்களையுமே அழிக்கத் தயங்குறது இல்ல. அதனால்தான் இயற்கைச் சீற்றம், புவி வெப்பமயமாதல், விவசாயம் பாதிப்பு, வறட்சி என்று நம்மைச் சுற்றி ஆயிரம் பிரச்சினைகள். வார்தா புயல் வந்தப்ப 30 ஆயிரத்துக்கும் மேலான மரங்கள் வேரோட சாய்ந்ததைப் பத்தி படிச்சதும், நானும் அதைச் செய்தியா கடந்துபோக விரும்பலை. அப்போதான் மரங்கள் வளர்க்கணும்னு எண்ணம் வந்துச்சு.
அதுக்கு வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு தீவிர கவனம் செலுத்தினேன். நாட்டு மரங்கள் வார்தா புயல்ல சாயலைன்னு தெரிஞ்சதும் அந்த மாதிரி மரங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு.
முன்னாடி காக்கா, குருவி எச்சங்கள் வழியா செடி, கொடி, மரம் வளர வாய்ப்பு இருந்தது. இப்போ அது சாத்தியம் இல்லை. அதான் அந்த வேலையை நாம செஞ்சா என்னன்னு தோணுச்சு” என்கிறார் விமலநாதன்.
மரம் வளர்க்கவோ அதைப் பராமரிக்கவோ இப்போது யாருக்கும் நேரம் இல்லை. அப்படியென்றால் மரங்களை எப்படித்தான் வளர்ப்பது என்பதற்கு விமலநாதன் ஒரு யோசனையைச் சொல்லி அதைச் செயல்படுத்தவும் செய்திருக்கிறார்.
நாம் தினமும் அதிகம் பயன்படுத்தும் பேப்பர் கப்பைப் பயன்படுத்தியவுடன் தூக்கி எறிவோம் அல்லவா? அதனால், பேப்பர் கப்பின் அடி பாகத்துல உரத்துடன் கூடிய விதையை ஒரு பகுதியாக அடைத்து வைத்தால், பேப்பர் கப்பை பயன்படுத்திய பின்னர் தூக்கியெறியும்போது அந்த உரத்துடன் கூடிய விதை குப்பையில் இருந்து செடியாக வளர்ந்து மரமாக மாறும் வகையில் யோசனையை முன்னெடுத்திருக்கிறார்.
இது எப்படிச் சாத்தியம்? “பேப்பர் கப்பை நான் ரெண்டு அடுக்கா பிரிக்கிறேன். ஒரு அடுக்குல விதை. இன்னொரு அடுக்குல தேநீர் குடிக்கத் தேவையான பகுதி. தேநீரைக் குடிச்சிட்டு கப்பைக் குப்பையில தூக்கிப்போட்டாலும், அந்த விதை செடியா, மரமா வளரும். அந்த மாதிரி பேப்பர் கப்புக்கு எங்கே போறதுதுன்னு யோசிக்க வேண்டாம். நானே தயார் பண்ணித் தருகிறேன். அதுக்காக யாரும் செலவும் பண்ண முடியாது.
கோயில்ல பிரசாதம் தர்ற கலயம், பாக்கு மட்டையில் செய்யப்பட்ட தட்டு இப்படித் தினமும் பயன்படுத்துற பொருட்கள்ல இந்த மாதிரி விதைகளை வைக்கிறேன். அப்படிப் பண்ணா 1000 விதைகளில் இருந்து 100 மரங்கள் நிச்சயம் வளரும். மக்களின் உதவியுடன் 100 மரங்கள் ஒரு லட்சம் மரங்களாகும்.
தற்போது இந்த முறைக்குக் காப்புரிமைக் கேட்டு பதிவு செய்திருக்கிறேன். அமெரிக்காவுல இதைச் செய்திருக்காங்க, ஆனா அவங்க பக்கவாட்டில், கீழ் விளிம்புப் பகுதிள்ல விதைகளை வைச்சு கொடுக்குறாங்க. நான் பேப்பர் கப்பை ரெண்டு அடுக்கா பிரிச்சு பண்றேன். வாழ்த்து அட்டைகள்ல சாக்லெட்டுக்குப் பதிலா விதைகள் வைக்குறது, கோயில்கள்ல கலயம், பாக்கு மட்டை தட்டில் விதை தர்றதுன்னு நிறைய யோசனைகளைச் செயல்படுத்திக்கிட்டு இருக்கேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் விமலநாதன்.
இந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக, அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேல் விதைகள் வழங்கியிருக்கிறார் இவர்.