

இந்தியாவில் வீதியோரக் கடைகளுக்குப் பஞ்சமே இல்லை. இந்தக் கடைகளின் ருசியே அலாதிதான். இன்று பல இளைஞர் குழுக்கள் இந்தியாவின் பெருநகரங்களில் இதுபோன்ற கடைகளைத் திறப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில் டாப்சி உபாத்யாய் என்கிற 21 வயது இளம்பெண்ணும் வீதியோரக் கடையையே தன்னுடைய தொழிலாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அதிலும் இவர் பி.டெக்., பட்டதாரி. படிப்புக்கேற்ற வேலையைத் தேடாமல், பானிபூரி போன்ற சாட் உணவைத்தான் விற்றுவருகிறார். இந்த வியாபாரத்துக்காகப் பெரிய புல்லட்டில் பானிபூரி கடையை இணைத்துச் சாலையில் ஓரிடத்தில் நிறுத்தி பானிபூரியை விற்பனை செய்கிறார்.
அண்மையில் ‘are you hungry’ என்கிற தலைப்பில் இன்ஸ்டகிராமில் இவர் வெளியிட்ட காணொளி, பெரும் வரவேற்பைப் பெற்றது. மிகவும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பானிபூரியை விற்பனை செய்யும் இவரை நெட்டிசன்கள் வாழ்த்தியே, அந்தக் காணொளியை வைரலாக்கிவிட்டார்கள்.
இன்ஸ்டாவிலும் நம்பர் ஒன்: சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை அவர்களுடைய ரசிகர்கள் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் பின்தொடர்வது வழக்கம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவை இன்ஸ்டகிராமில் 2.5 கோடிப் பேர் பின்தொடர்கிறார்கள்.
இதன்மூலம் இளம் வயதில் அதிக பின்தொடர்வோரை வைத்திருக்கும் முதல் வீரர் என்கிற பெருமையை பாண்ட்யா எட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் ட்விட்டரில் அதிகளவில் பின்தொடர்வோரை வைத்திருக்கும் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றார். தற்போது இன்ஸ்டகிராமில் பாண்ட்யா அதைப் பெற்றிருக்கிறார். இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள பாண்ட்யா, ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.