Last Updated : 29 Sep, 2017 12:32 PM

 

Published : 29 Sep 2017 12:32 PM
Last Updated : 29 Sep 2017 12:32 PM

கண்டுபிடிப்பு புதுசு: இருண்ட கண்டத்தின் ஒளி விளக்கு!

எடை மெஷின் போன்ற ஒரு அமைப்பில் எடையை ஏற்றியதும் விளக்கு எரியும் அதிசயத்தைப் பார்த்திருக்கிறீர்களா?கென்யாவில் மார்ட்டின், ஜிம் என்ற இரு விஞ்ஞானிகள் இந்த அதிசயத்தைத் தினமும் செய்துக்காட்டுகிறார்கள். புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி, இந்த விளக்கை இவர்கள் எரிய வைக்கிறார்கள். ‘கிராவிட்டி லாம்ப்’ என்றழைக்கப்படும் இது ஆப்பிரிக்காவில் இப்போது புகழ்பெற்றுவருகிறது.

வயர்கள் இல்லாமல் தானாக சார்ஜ் ஆகும் தானியங்கி உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதே உலகில்தான் சுமார் 100 கோடி மக்கள் மின் வசதி சரிவர இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவில் இந்த நிலை அதிகம். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று விஞ்ஞானிகள் மார்டினும் ஜிம்மும் விரும்பினார்கள். ‘கிராவிட்டி லாம்ப்’ என்ற பெயரில் புவியீர்ப்பு விளக்கை உருவாக்கும் முயற்சியில் குதித்தனர். நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டில் தங்கள் ஆராய்ச்சியை இவர்கள் தொடங்கினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆராய்ச்சியில் இவர்கள் வெற்றியும் பெற்றனர். 2014-ம் ஆண்டில் முதல் முறையாக இந்த விளக்கை கென்யாவில் அறிமுகப்படுத்தினர். இந்த புவியீர்ப்பு விளக்கை அவர்கள் அறிமுகப்படுத்தியபோது ஒட்டுமொத்த ஆப்பிரிக்க அறிவியல் உலகமும் மூக்கில் விரல் வைத்தது.

அதுசரி, அதென்ன கிராவிட்டி லாம்ப்? மண்ணெண்னெய் விளக்குகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தும் மாற்று விளக்கு இது. 6 அடி உயரத்தில் புவியீர்ப்பு லைட்டைப் பொருத்திகொள்ள வேண்டும். அதோடு சேர்ந்து இழுக்க ஒரு சக்கரத்தையும் கயிறையும் கட்டிவிட வேண்டும். இதன் அடியில் இரு பைகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் பையில் சுமார் 12 கிலோ எடை உள்ள பொருட்களை வைக்க வேண்டும். இதில் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் உதவியுடன் எடையை மேலே இழுக்கலாம். எடை மேலே சென்றதும், விளக்கு எரியும். எடை மேலே இருக்கும்வரை சுமார் 20-30 நிமிடங்கள் விளக்கு தொடர்ந்து எரியும்.

எடை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வந்ததும் விளக்கு அணைந்துவிடும். எடையை மீண்டும் மேலே இழுத்தால் விளக்கு எரியும். மின்சார உதவியின்றி, புவியீர்ப்பு விசையின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த விளக்கு எரிய வைக்கப்படுவதால், கென்யாவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்கா முழுவதும் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை மண்ணெண்னெய் விளக்கு வெளிச்சத்தில் இரவைக் கழித்த ஆப்பிரிக்க மக்களுக்கு இது வரப்பிரசாதமாகவும் அமைந்துவிட்டது. மின் வசதி முழுமையாக இல்லாத வளரும் நாடுகளில் எல்லாம் இந்த கிராவிட்டி விளக்கைக் கொண்டு செல்லும் முயற்சியில் இரு விஞ்ஞானிகளும் தற்போது ஈடுபட்டுள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x