பீனிக்ஸ் ஃபெடால்!

பீனிக்ஸ் ஃபெடால்!
Updated on
2 min read

டென்னிஸ் விளையாட்டுக்கு இது புத்துணர்வு வருடம்! ஆம், ‘இனிமேல் இவங்க எல்லாம் காணாமப் போயிடுவாங்கப்பா’என்று சக போட்டியாளர்கள், விளையாட்டு விமர்சகர்கள், ரசிகர்கள் எனப் பலராலும் கருதப்பட்ட இரண்டு வீரர்கள் புடம்போட்ட தங்கமாக நெருப்பிலிருந்து மீண்டெழுந்திருக்கிறார்கள்.

அந்த இரண்டு வீரர்கள், ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால். சுருக்கமாக ‘ஃபெடால்!’.

டென்னிஸ், வருடம் முழுக்க விளையாடப்படுகிறது. ஆனால், ‘மேஜர்ஸ்’ என்று சொல்லப்படும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய நான்கு போட்டிகள்தான் மிகவும் முக்கியமானவை. இந்தப் போட்டிகளில் பெறும் கோப்பைகள்தான் ஒரு டென்னிஸ் வீரரின் ‘கரியரில்’ இடம்பெறக் கூடியவை. இந்த நான்கு போட்டிகளிலும் கோப்பை வென்றவர்களை ‘கரியர் கிராண்ட் ஸ்லாம்’ வென்றவர் என்று அழைக்கிறார்கள்.

நடந்து முடிந்த அமெரிக்க ஓபனோடு, இந்த ஆண்டுக்கான மேஜர்ஸ் போட்டிகள் எல்லாம் முடிவடைந்துவிட்டன. இந்த ஆண்டு நடைபெற்ற மேஜர்ஸ் போட்டிகளில் ஆளுக்கு இரண்டு கோப்பைகள் என நான்கு கோப்பைகளையும் ஃபெடரரும் நடாலும் தட்டிச் சென்றிருக்கிறார்கள். கூடவே, டென்னிஸ் விளையாட்டில் தங்களின் ஆதிக்கத்தை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஃபெடரரும் நடாலும் ‘கரியர் கிராண்ட் ஸ்லாம்’ பட்டங்களை வென்றவர்கள். இரண்டு பேருமே 30 வயதைக் கடந்தவர்கள். இந்த ஆண்டு நடைபெற்ற மேஜர்ஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றை ஃபெடரர் கைப்பற்ற, பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகியவற்றை நடால் கைப்பற்றியிருக்கிறார். அதாவது, இந்த ஆண்டுக்கான மேஜர்ஸ் போட்டியை வெற்றியுடன் ஃபெடரர் தொடங்கி வைக்க, அதே வெற்றியுடன் நடால், அந்தப் போட்டியை முடித்து வைத்திருக்கிறார்.

இரண்டு பேருக்குமே இது ஒரு முக்கியமான ஆண்டு. காரணம், 2012-க்குப் பிறகு ஃபெடரர் இந்த ஆண்டில்தான் ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பையை வென்றார். அதேபோல 2014-க்குப் பிறகு இந்த ஆண்டுதான் பிரெஞ்சு ஓபனில் நடால் கோப்பையை வென்றார்.

இருவரின் இந்த இடைவெளிக்குக் காரணம், காயங்கள்! ஃபெடரருக்கு முழங்காலில் காயம் ஏற்பட, நடாலுக்கு முழங்கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. காயங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றைத் தாண்டி, இந்த ஆண்டு இருவருமே ஏ.டி.பி. தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். நடால் முதலிடத்தையும் ஃபெடரர் இரண்டாவது இடத்தையும் அடைந்திருக்கிறார்கள்.

30 வயதுக்கு மேலாகிவிட்டது. பார்க்காத காயங்கள் இல்லை. சந்தித்த தோல்விகள் எவ்வளவோ! இருந்தும் எப்படி இவர்களால் மீண்டெழ முடிந்தது? அதற்கு ஒரு சின்ன காரணம் அர்ப்பணிப்பு. ஒரு பெரிய காரணம் ஃபிட்னெஸ்!

அந்தப் பெரிய காரணம்தான், டென்னிஸில் தற்போது புதிதாக வந்திருக்கும் வீரர்களைத் தடுமாறச் செய்கிறது. ஃபெடரர், நடால் தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்தவரை விடுமுறை என்பதே இல்லை. 4 மேஜர்ஸ் போட்டிகளோடு, 9 ‘மாஸ்டர்ஸ் 1000’ போட்டிகளும் மிகவும் முக்கியமானவை. அந்த 9 போட்டிகளில், ஒரு வீரர் குறைந்தபட்சம் 8 போட்டிகளில் விளையாட வேண்டும். காரணம் அதுதான் தரவரிசையில் இடம்பெற உதவும். அந்த 9 போட்டிகளில் சுமார் 6 போட்டிகள் அடுத்தடுத்த வாரங்களில் நடைபெறும். இதற்கு நடுவே, ஏ.டி.பி.250, ஏ.டி.பி.500 போட்டிகள், பல சுற்றுகள் கொண்ட டேவிஸ் கோப்பைப் போட்டிகள் என எல்லாவற்றிலும் விளையாட வேண்டும்.

தவிர, இந்த ஆண்டு முதல் ‘லாவர் கோப்பை’ போட்டி என்ற புதிய போட்டி அறிமுகமாகவுள்ளது. கோல்ஃப் விளையாட்டில் உள்ள ‘ரைடர் கோப்பை’க்கு இணையான போட்டி இது. இவ்வளவு, போட்டிகளில் ஒரு வீரர் விளையாட வேண்டுமென்றால், அவருக்கு எந்த அளவு ஃபிட்னெஸ் தேவைப்படும்? விளையாடுவதற்குத் தேவையான உடல் வலிமை மட்டுமல்ல, காயம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வரவும் போதிய ஃபிட்னெஸ் முக்கியம்.

நோவாக் ஜொகோவிச், ஸ்டான் வாவ்ரிங்கா, கேய் நிஷிகோரி, மிலோஸ் ரவோனிக், ஆண்டி முர்ரே போன்ற முதல் நிலை வீரர்கள் எல்லாம் காயம் காரணமாக அமெரிக்க ஓபனிலிருந்து வெளியேறினார்கள். இவர்கள் அனைவருமே 30-களில் இருப்பவர்கள். ஆனால், இவர்களால் ஏன் ஃபெடரர், நடால் போல விளையாட முடியவில்லை? முறையான ஃபிட்னெஸ் இல்லாததுதான். சமயங்களில், ஒரு வீரர் விளையாடும் ‘ஸ்டைல்’ கூட, அவருக்குக் காயங்களை ஏற்படுத்தலாம். காயங்கள் ஏற்படாதவாறு, தங்களின் விளையாட்டுப் பாணியைக் கொஞ்சம் மாற்றினால், அந்த வீரரால் இன்னும் சில காலத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியும். ஃபெடரரும் நடாலும் அப்படித் தாக்குப் பிடிப்பவர்கள்தான்!

எனவே, ஃபெடரரையும் நடாலையும் தோற்கடிக்க, இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அதுவரை இந்த இருவரை நாம் ரசித்துக்கொண்டிருப்போம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in