

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி என்றால், பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால், பரபரப்பு மட்டுமல்ல, சாதனை, மோதல், போட்டிக்குப் பிறகு பாகிஸ்தானில் தாக்குதல் என இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஒரு நாள் போட்டி ஒன்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது, அது, 1996இல் பெங்களூருவில் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பை காலிறுதியில் மோதிய போட்டி.
1996 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்தான் முதன்முதலாக 12 அணிகள் பங்கேற்றன. முதன் முதலாகக் காலிறுதிப் போட்டிகளும் இந்தத் தொடரில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. 12 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. சுற்றுப் போட்டிகளின் முடிவில் ‘ஏ’ பிரிவிலிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும்; ‘பி’ பிரிவிலிருந்து தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.
இதில், இரண்டாவது காலிறுதிப் போட்டிதான் இந்தியா - பாகிஸ்தான் இடையே பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் அசாருதீன், இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். நவ்ஜோத் சித்து 93 ரன்களைக் குவித்த இந்தப் போட்டியில், கடைசி கட்டத்தில் அஜய் ஜடேஜா அதிரடியாக விளையாடினார். கடைசி 2 ஓவரில் மட்டும் இந்தியா 40 ரன்களைக் குவித்தது. இதில் வாக்கார் யூனுஸ் பந்தில் அஜய் ஜடேஜா சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு, ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.
288 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணி, முதல் 10 ஓவர்களிலேயே 84 ரன்களைச் சேர்த்தது. இந்தப் போட்டியில்தான் வெங்கடேஷ் பிரசாத் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பாகிஸ்தான் கேப்டன் அமீர் சோகைல், அந்தப் பந்தைக் காட்டி வெங்கடேஷ் பிரசாத்தைச் சீண்டினார். அதற்கு அடுத்த பந்திலேயே அமீர் சோகைலை கிளீன் போல்டாக்கி, வெங்கடேஷ் பிரசாத் பதிலடி கொடுத்த நிகழ்வு அரங்கேறியது. அதன் பிறகு பாகிஸ்தான் அணி சீராக விக்கெட்டுகளை இழந்தவண்ணம் இருந்தது. இறுதியில் 49 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை மட்டுமே எடுத்து, பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஆறாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத்துக்கு இதுவே கடைசி போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு, கடைசி நேரத்தில் தசைப்பிடிப்பு காரணமாக கேப்டன் வாசிம் அக்ரம் விலகினார். எனவே, அமீர் சோகைல் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், வாசிம் அக்ரம் வீட்டில் கல்லையும் அழுகிய முட்டையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் வீசினர்.
இத்தனை நிகழ்வுகள் அரங்கேறிய அந்தப் போட்டி இன்றுதான் (09-03-1996) நடைபெற்றது.