இந்திய கிரிக்கெட்டில் இன்று (07-03-1987): டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000.. சுனில் கவாஸ்கர் படைத்த மகத்தான சாதனை!

இந்திய கிரிக்கெட்டில் இன்று (07-03-1987): டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000.. சுனில் கவாஸ்கர் படைத்த மகத்தான சாதனை!
Updated on
1 min read

டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 110 ஆண்டுகள் கழித்து ஒரு பிரம்மாண்ட சாதனை சர்வதேச அரங்கில் படைக்கப்பட்டது. அந்தச் சாதனையை நிகழ்த்தியது, ஓர் இந்தியர்.

முதல் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 1877ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்பர்னில் நடைபெற்றது. அதன் பிறகான காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளே கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர் ஒருவராலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட முடியவில்லை.

இந்தியா தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை 1932இல்தான் விளையாடியது. அடுத்த 55 ஆண்டுகளில் இந்தியர் ஒருவர்தான், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து மகத்தான சாதனையைப் படைத்தார். அவர், சுனில் கவாஸ்கர். 1987ஆம் ஆண்டில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்தது. இதில் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 63 ரன்களை எடுத்து கவாஸ்கர் அவுட் ஆனார். அவர், 52 ரன்களைக் கடந்தபோது, சர்வதேச டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இது இவருடைய 124ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்தது. இப்போட்டிக்குப் பிறகு பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிதான், சுனில் கவாஸ்கரின் கடைசி போட்டியாகவும் அமைந்தது. மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களோடு 10,122 ரன்களைக் குவித்தார் கவாஸ்கர்.

டெஸ்ட் அரங்கில் முதன் முதலாக 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை சுனில் கவாஸ்கர் எட்டிய தினம்தான் இன்று (07-03-1987).

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in