

ஹோட்டல் என்றால் நிலத்தில்தான் இருக்க வேண்டுமா என்ன? அந்தரத்திலும் இருக்கலாம். அப்படியான ஹோட்டல் ஒன்று நார்வேயில் உருவாகிவருகிறது. ‘ஸ்கை குரூஸ்’ என்றழைக்கப்படும் இந்த ஹோட்டலை ‘பறக்கும் ஹோட்டல்’ என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். விமான வடிவமைப்புப் பாணியிலான இந்த ஹோட்டலை டோனி ஹோம்ஸ்டன் என்பவர் உருவாக்கியுள்ளார்.
அணுசக்தியால் இயக்கப்படும் இந்தப் பறக்கும் ஓட்டல், செயற்கை நுண்ணறிவு பைலட் மூலம் பறக்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பறக்கும் ஹோட்டல் தொடர்ச்சியாகப் பல நாள்கள் அல்லது மாதங்கள்கூடப் பறக்க முடியுமாம். அந்தரத்தில் இருக்கும்போதே ஹோட்டலில் பரமாரிப்பு வேலையையும் மேற்கொள்ள முடியும். ஒரு நட்சத்திர ஹோட்டலைப் போல உருவாகிவரும் இதில் இல்லாத வசதிகளே இல்லை.
ஷாப்பிங் மால், பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகம், விளையாட்டு மைதானம், பார், சினிமா, திருமண மண்டபம், நீச்சல் குளங்கள், சந்திப்பு அறைகள் என இந்தப் பறக்கும் ஹோட்டலின் வசதிப் பட்டியல்கள் நீள்கின்றன. இந்தப் பறக்கும் ஹோட்டல் குறித்த அனிமேஷன் வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.