

காலங்கள் கடந்தாலும் சில கிரிக்கெட் போட்டிகளை மறக்கவே முடியாது. அப்படியான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற தினம் (01-03-1992).
1992 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது சுற்றுப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால், அடுத்த சுற்றுப் போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இருந்தது இந்திய அணி.
மூன்றாவது சுற்றுப் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டைப் பிடித்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களைச் சேர்த்தது.
இரண்டாவதாகக் களமிறங்கிய இந்திய அணி மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கியது. இந்திய அணி 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அந்த உலகக் கோப்பையில் பின்பற்றப்பட்ட மழை விதி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. மழை விதி இரண்டாவதாக மட்டை பிடிக்கும் அணிகளுக்குப் பாதகத்தை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியிலும் மழை விதி இந்திய அணிக்கு சதி செய்தது. சுமார் 12 நிமிடங்கள் பெய்த மழையால், 47 ஓவர்களில் 236 ரன்களை எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலக்கு மாறியது.
இதன்பிறகு சீராக இந்திய அணியின் விக்கெட்டுகள் விழுந்தபோதும், கேப்டன் அசாருதீன், சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோரின் ஆட்டத்தால், இந்திய அணி இலக்கை நோக்கி முன்னேறியது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை டாம் மூடி வீசினார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இந்திய வீரர் கிரண் மோரே தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விளாசி ஆஸ்திரேலியாவுக்கு கிலியை ஏற்படுத்தினார். இதனால், 4 பந்துகளில் 5 ரன்கள் என்றானது. எனவே, இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், மூன்றாவது பந்தில் கிரண் மோரே கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, 5ஆவது பந்தில் மனோஜ் பிரபாகர் ரன் அவுட் ஆனார். எனவே கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தை ஜவஹல் ஸ்ரீநாத் ஓங்கி அடிக்க, காற்றில் பறந்து சென்ற அந்தப் பந்தை எல்லைக் கோடு அருகே ஸ்டீவாஹ் பிடித்து கீழே விட்டார். அவுட் ஆகியிருக்க வேண்டிய ஸ்ரீநாத் 2 ரன்களை எடுத்துவிட்டு, மூன்றாவது ரன்னுக்கு முயன்றபோது எதிர்முனையில் வெங்கடபதி ராஜு ரன் ஆவுட் ஆனார். இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணி இந்தப் போட்டியில் அடைந்த தோல்வியால், உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்வதில் நெருக்கடி அதிகரித்தது. 1987ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சென்னையில் நடந்த போட்டியிலும் ஒரு ரன் வித்தியாசத்தில்தான் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது. 1992 உலகக் கோப்பையிலும் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்ற நிகழ்வு தொடர்ச்சியாக அரங்கேறியது.