

கையில் திறன் பேசி இல்லாத இந்தியர்களைப் பார்ப்பது இன்று அரிதாகிவிட்டது. எங்கு சென்றாலும் குனிந்தத் தலையோடு திறன் பேசியை நோண்டிக்கொண்டிருக்கும் சமூகம் உருவாகிவிட்டது. சாதாரண பெட்டிக் கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்தும் டிஜிட்டல்மயமாகிவிட்ட நிலையில், திறன்பேசி இல்லாமல் ஒருவர் இயங்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு நிலவரப்படி 84 கோடிப் பேர் திறன்பேசியை வைத்திருப்பதாகத் தரவுகள் சொல்கின்றன. 2017இல் 35.7 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளில் ஒன்றரை மடங்கு உயர்ந்துவிட்டது.
திறன் பேசியின் பயன்பாடும், அதையொட்டி இணையப் பயன்பாடும் கூடிக்கொண்டே இருக்கும் நிலையில், இந்தியர்களின் ‘டேட்டா’ பயன்பாடு பற்றி ஓர் ஆய்வறிக்கை வெளியாகி மலைக்க வைத்திருக்கிறது.
நோக்கியா சார்பில் மொபைல் பிராட்பேண்ட் டிராபிக் இண்டெக்ஸ் (MBiT) அறிக்கை சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி திறன்பேசி பயன்படுத்தும் ஓர் இந்தியர், மாதத்துக்கு சராசரியாக 19.5 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பயன்பாடு என்பது 6,600 பாடல்களைப் பதிவிறக்கும் செய்வததற்குச் சமமானது. இந்த எண்ணிக்கை 2024இல் இரு மடங்காக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது டேட்டா பயன்படுத்துவதில் ஏற்படும் நெரிசல் 3.2 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமான 5ஜி சாதனங்கள் இந்திய திறன்பேசி சந்தையை ஆக்கிரமித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
பான்-இந்தியா மொபைல் டேட்டா பயன்பாடு 2018இல் மாதத்துக்கு 4.5 எக்ஸாபைட்டுகளாக இருந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை தற்போது 14.4 எக்ஸாபைட்டுகளாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை சொல்கிறது. இந்தியர்களை 5ஜி முழுமையாக ஆக்கிரமிக்கும்போது இந்த எண்ணிக்கை எகிறும் என்பதில் சந்தேகமில்லை.