

ராஜஸ்தானில் ஒரு சிறுமி கிரிக்கெட் விளையாடியது சமீபத்தில் பெரும் ஹிட் அடித்தது. அதில் சுட்டெரிக்கும் வெயிலில் காலில் செருப்புகூட அணியாமல் தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு பந்தையும் மைதானத்துக்கு வெளியே அநாயாசமாக விளாசித் தள்ளுகிறார். சூரியகுமார் யாதவ்போல, 360 டிகிரி கோணத்தில் இவர் விளாசுவதுதான் சிறப்பு.
இந்தச் சிறுமியின் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்து சச்சின் டெண்டுல்கர் சிலாகித்து எழுதியிருந்தார். “மகளிர் கிரிக்கெட் லீக் ஏலம் நடைபெற்றது. அதற்குள் இன்று பேட்டிங் தொடங்கிவிட்டது. உன்னுடைய பேட்டிங் திறனை மிகவும் ரசித்தேன். வாழ்த்துகள்” என்று ட்வீட்டியிருந்தார். அது வைரலாக, இந்தச் சிறுமியைப் பலரும் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
கின்னஸ் முத்தம்: மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பதுபோல காதலர் தினம் முடிந்தாலும், அது தொடர்பான செய்திகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. அந்த வகையில் காதல் ஜோடி தண்ணீருக்கு அடியில் நீண்ட நேரம் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்துப் பேசுபொருளாகியிருக்கின்றனர்.
இந்த ஜோடி தண்ணீருக்கு அடியில் 4 நிமிடங்கள் 6 விநாடிகள் முத்தமிட்டு இச்சாதனையைச் புரிந்துள்ளனர். கடந்த ஆண்டும் இதே ஜோடி 3 நிமிடங்கள் 24 விநாடிகள் முத்தமிட்ட சாதனையை அவர்களே முறியடித்திருக்கிறார்கள். இதை ஒரு பொழப்பாகவே வச்சிருப்பாங்கபோல!
இது சாட்ஜிபிடி சமையல்: ‘ChatGPT’ வந்தாலும் வந்தது. எது எதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம் என்கிற தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. குறும்புக்கார இணையவாசி ஒருவர் சாட்ஜிபிடியிடம் மீந்துபோன ரொட்டி, தக்காளி, பால், வெண்ணெய், வெங்காயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி என்ன சமையல் செய்யலாம் என்று கேட்டிருக்கிறார்.
“இவற்றைப் பயன்படுத்தி வெண்ணெய் உருளைக்கிழங்கு வறுவலும் காய்கறி அவியலும் செய்யலாம்” என்று அதற்கு சாட்ஜிபிடி பதில் சொல்லியிருக்கிறது. அத்துடன் எவ்வளவு வெப்பத்தில் உணவைச் சமைக்கலாம் என்பதுடன் செய்முறை விளக்கத்தையும் அளித்திருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், இனி சொந்த அறிவுக்கு வேலையே இருக்காது போலிருக்கு!
தொகுப்பு: ரா. மனோஜ்