

ஜெர்மனியில் தோன்றிய ஃபிட்ஸ் பால் (கைப்பந்து என்றே அழைக்கிறார்கள்) ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலம். இந்தியாவில் கடந்த ஒரு தசாப்தமாக விளையாடப்பட்டு வரும் இந்த விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் அளவுக்குத் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த பிரவீன் சந்திரசேகர்.
பதினெட்டு வயதில் அடியெடுத்து வைக்க உள்ள பிரவீன் தற்போது திண்டுக்கல் வித்யா பாரதி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். காணொளிகளில் பார்ப்பதற்கு ‘வாலி பால்’ போலவே இருக்கும் ஃபிட்ஸ் பால் விளையாட்டுக்குள் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிரவீன் நுழைந்ததே ஒரு விபத்துதான்.
ஜெர்மனியில் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஃபிட்ஸ் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் பெற்றிருக்கிறார்.
“நான் பள்ளியில் வாலிபால் அணியில் இருக்கிறேன். நான் படிக்கும் பள்ளியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன், ஃபிட்ஸ் பால் சங்கத்தில் இருக்கிறார். அவர்தான், இதுவும் வாலிபால் போன்ற விளையாட்டுதான் என்று கூறி ஃபிட்ஸ் பாலுக்கு அழைத்தார்.
கரோனா காலமான 2021ஆம் ஆண்டில்தான் இதை விளையாடத் தொடங்கினேன். புதிய விளையாட்டு என்பதால், இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. இதை விளையாடத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க சென்னையில் தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்று மாநில அளவில் தேர்வானேன்.
பிஹாரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். திண்டுக்கல்லில் நடைபெற்ற போட்டியில் வெள்ளி வென்றேன். கிளப் அளவிலான மூன்று போட்டிகளில் பங்கேற்றுத் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறேன். பிறகு தேசிய அளவில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து என்னோடு சேர்த்து மூன்று பேர் தேர்வானோம்” என்று ஃபிட்ஸ் பால் விளையாட்டில் தேசிய அணிக்குத் தேர்வான விதம் பற்றி விவரிக்கிறார் பிரவீன்.
எந்த ஒரு வீரரும் சர்வதேச அளவில் விளையாட தகுதிபெற்றால், உற்சாக மிகுதியில் இருப்பார்கள். ஆனால், ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாகப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார் பிரவீன். அதற்குக் காரணம், இந்த விளையாட்டுக்காக ஜெர்மனி செல்வதற்கான செலவை இவரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
“ஜெர்மனி செல்ல பயண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக விசாவுக்காக ஒரு லட்சம் ரூபாயைக் கட்டச் சொல்லியிருக்கிறார்கள். எஞ்சிய ரூ.1.20 லட்சம் ரூபாயை 2 மாதங்களுக்குள் கட்ட வேண்டும். நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய அப்பா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அம்மா கயல்விழிதான் என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்.
‘டெலி காலர்’ வேலையில் உள்ள என்னுடைய அம்மாவால் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியாத சூழல் உள்ளது. ஸ்பான்சர் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த விளையாட்டுக்கு அங்கீகாரம் இன்னும் கிடைக்காததால், சங்கத்தாலும் உதவ முடியவில்லை. எனவே, பணம் புரட்ட முடியாமல் நானும் அம்மாவும் தவித்துவருகிறோம். சர்வதேசப் போட்டியில் நான் விளையாட அரசோ வசதி வாய்ப்புள்ளவர்களோ எனக்கு உதவ முன்வந்தால் நன்றாக இருக்கும். அதற்காக முயற்சிசெய்து வருகிறேன்” என்கிறார் பிரவீன்.
இந்திய அளவில் ஃபிட்ஸ் பால் விளையாட்டுக்காக 10 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். இதில் பிரவீனும் இடம்பெற்றிருப்பது பெருமையான விஷயமே. ஜெர்மனியில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் அவர் பங்கேற்க, அவருடைய பொருளாதர நிலை தடையாக இருக்கக் கூடாது. ஓர் ஏழையின் கனவு நனவாக ஆதரவுக் கரம் நீளட்டும்.