ஓயாமல் பொழியும் காதல் மழை!

ஓயாமல் பொழியும் காதல் மழை!
Updated on
3 min read

ஒவ்வொரு காலத்திலும் காதல் புது பரிமாணத்தை எட்டியிருக்கிறது. இன்றைய இணைய யுகத்தில் அது அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டது. அந்த வகையில் ‘இணையவழிக் காதல்’, ‘சிங்கிள்ஸ் டே’ எனக் காதலர் தினத்தையொட்டி சில டிரெண்டுகளும் பேசப்படுகின்றன. அவற்றில் சில:

இணையவழிக் காதல்: இணையம் பரவலான பிறகு இணையவழிக் காதலும் இன்று சாதாரணமாகிவிட்டது. இந்தியாவில் முதன்முறையாகக் கடந்த ஆண்டில் மட்டும் 42 சதவீதத்தினர் புதிதாக இணையவழி டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதன்மூலம் நாடு கடந்து காதலும் இணையவழியில் சாத்தியமாகிவிட்டது. கடிதம், மின்னஞ்சல் அனுப்பிய காலம் மாறி டேட்டிங் செயலிகள், வாட்ஸ் அப் மூலம் எமோஜிகளால் காதல் மொழியைப் பேசுகிறது இன்றைய தலைமுறை. புத்தாயிரத்துக்குப் பிறகு பிறந்த 2கே கிட்ஸ்களின் விருப்பமாக இணையவழி டேட்டிங்தான் இந்த ஆண்டும் டிரெண்டிங்கில் உச்சம் தொடும் என்கின்றனர் இணைய உலகினர்!

அனைவருக்குமான காதல்: பால் வேறுபடுகளுக்கு அப்பாற்பட்டது காதல். எதிர்பாலினத் தவரைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட காதலர் தினக் கொண்டாட்டம் எல்லாருக்குமானதாகவும் இருக்க வேண்டும் என்கிற ஆதங்கமும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

அந்த வகையில் பால் புதுமையினர், சமூகப் புரிதலுக்குத் தேவையான முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றனர். அனைவருக்குமான காதலர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்பதே பால்புதுமையினரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இது ஜப்பான் ஸ்டைல்: ஒரே நாளில் முடிந்துவிடும் காதலர் தினம் ஜப்பானில் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14ஆம் தேதி பெண்கள், அவர்கள் விரும்பும் ஆண்களுக்குப் பரிசு கொடுத்து காதலைச் சொல்ல வேண்டும்.

சரியாக ஒரு மாதத்துக்குப் பிறகு மார்ச் 14 அன்று ஆண்கள் பரிசுகளைத் திருப்பி அளித்துத் தங்களது விருப்பத்தைக் கூறலாம்! இந்த நாள் ‘ஒயிட் டே’வாகக் கொண்டாடப்படுகிறது. இது ஜப்பானின் காதலர் தினப் பாரம்பரியம்.

‘முரட்டு’ சிங்கிள் தினம்: காதல் வாய்க்காத முரட்டு சிங்கிள்களுக்கென ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது. சீனர்கள் தொடங்கி வைத்த இந்த ‘சிங்கிள்ஸ் தினம்’ நவம்பர் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

என்றாலும் பல நாடுகளில் காதலர் தினமான பிப்ரவரி 14ஐ, ‘சர்வதேச சிங்கிள்ஸ் தின’மாகவும் கொண்டாடுகிறார்கள். ஒருவரைச் சார்ந்து இல்லாமல் சுய அன்பைக் கொண்டாட வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. ‘International Quirkyalone Day’ என்கிற சிங்கிள்ஸ் தினம் 2003ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

காதலுக்கு உகந்த நாள்: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 60 லட்சம் ஜோடிகள் காதலர் தினத்தன்று நிச்சயம் செய்துகொள்வதாகச் சில தரவுகள் சொல்கின்றன. ஏராளமானோர் பிப்ரவரி மாதத்திற்காகக் காத்திருந்து 14ஆம் தேதியன்று காதலைச் சொல்வது, காதலை ஏற்பது, நிச்சயம் செய்வதுகொள்வது எனத் திட்டமிட்டுக் கொண்டாடி மகிழ்கின்றனர். அடுத்தபடியாகப் புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதியன்று நிறைய ஜோடிகள் தங்கள் காதலை உறுதிப்படுத்துகின்றனர்!

கப்புள் கோல்ஸ்: தொட்டதெல்லாம் வைரலாகும் இணைய யுகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பயன்படுத்தப் பட்ட வார்த்தைகளில் இதுவும் ஒன்று. அது, ‘கப்புள் கோல்ஸ்’! காதல் செய்வது எப்படி எனத் தொடங்கி காதலில் சொதப்புவது எப்படி என்பது வரை இன்ஸ்டகிராமில் பதிவுசெய்து ‘#Couplegoals’ என்கிற ஹாஷ்டேக் மூலம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆவணப்படுத்தி வருவது ஜோடிகளின் வழக்கமாகி விட்டது.

இந்த ‘கப்புள் கோல்ஸ்’ அலப்பறைகள் காதலர் தினத்தன்று சற்றுத் தூக்கலாகவே இருக்கும். சாக்லெட் பரிசுகள், ரோஜாக்கள் எனக் குவிந்து கிடக்கும் ‘கப்புள் கோல்ஸ் ரீல்ஸ்’களால் சிங்கிள்ஸின் மனங்கள் ரணமாகும்!

மாடர்ன் லவ்: ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ‘மாடர்ன் லவ்’ என்கிற தலைப்பின் கீழ் வெளிவரும் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது ‘மாடர்ன் லவ்’ வெப் சீரீஸ். இதன் இந்தியப் படைப்பான ‘மாடர்ன் லவ்’-மும்பை, ஹைதராபாத் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதன் தமிழ் படைப்பும் தயாராகிக்கொண்டிருக்கிறது. மும்பை, சென்னை, ஹைதராபாத் என ஒவ்வொரு நகரத்திலும் காலத்துக்கு ஏற்ப மாறும் வெவ்வேறு காதல் கதைகளின் சங்கமம்தான் இந்த மாடர்ன் லவ்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in