

காதலர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அது பற்றி சுவையான சில தகவல்கள்:
* தென் கொரியாவில் ஆண்டு முழுவதுமே காதலர் தினம்தான். அங்கு மாதத்தின் ஒவ்வொரு 14ஆம் தேதியும் ’ரோஜா தினம்’, ’முத்த தினம்’, ’அணைப்பு தினம்’ என்று முறைவைத்துக் கொண்டாடுகிறார்கள். ’முரட்டு சிங்கிள்’களுக்கு மட்டும் அன்று கறுப்பு தினமாம்.
* பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் ஜனவரி 25ஆம் தேதியைக் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அன்று கைகளால் செய்யப்பட்ட மர ஸ்பூன்களைப் பரிமாறிக்கொள்வதை 16ஆம் நூற்றாண்டிலிருந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.
* தைவானில் ஜூலை 7 அன்று காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் மலர்களைக் கொடுத்து காதலை உணர்த்துகிறார்கள். ஒற்றை ரோஜாவைத் தந்தால் காதலுக்கான முன் அறிவிப்பாம். 11 ரோஜாக்களைக் கொடுத்தால் காதல் கைகூடிவிட்டது என அர்த்தமாம். காதலைத் தொடர 99 ரோஜாக்களும் திருமணத்துக்கு ஒப்புதல் பெற 108 ரோஜாக்களையும் கொடுத்து மணம் முடிக்கிறார்கள்.
* காதலர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடினாலும் இந்தோனேசியா, சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடத் தடை இருந்துவருகிறது.