Published : 09 Feb 2023 04:33 PM
Last Updated : 09 Feb 2023 04:33 PM

தென்றலும் புயலும் சகவாசி!

சுயாதீனமான தமிழ் இசைப் பாடல்களையும் கலைஞர்களையும் வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு கோக் ஸ்டுடியோ தமிழ், இசைப் பாடல்களைத் தமிழில் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. 25 கலைஞர்களுக்கு முதல் கட்டமாக சுயாதீனமான இசைப் பாடல்களை உருவாக்குவதற்கு உதவும் இந்த அமைப்பின் முதல் பாடல் ‘சகவாசி' அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் தமிழ் அறிந்த ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அறிவின் சிந்தனையில் உதித்த இப்பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் சக உயிர்களை நேசிக்கத் தூண்டும் உத்வேகத்தை நமக்கு அளிக்கின்றன.

யானை உலவும் காட்டில்தான் மானும் உலவ வேண்டும். இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்க்கும் சொந்தம் என்னும் பன்மைத்துவத்தை ஓங்கி ஒலிக்கிறது அறிவு எழுதி ஷான் ரோல்டன் இசையமைத்து வெளிவந்திருக்கும் `சகவாசி' பாடல். பாடகர் அறிவு, ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடலின் கருத்தும் மிகவும் தரமான கலைஞர்களின் வாத்திய இசையும், பேக்கிங்-கோரஸ் கலைஞர்களின் சேர்ந்திசையும் ஒட்டுமொத்த இசைக் குழுவையும் ஒரு திருவிழா வைபவத்தைக் காணும் நேர்த்தியோடு நம் கண்களுக்கு இப்பாடல் விருந்து படைக்கிறது. பாடலுக்கான ஒளிப்பதிவு நேர்த்தியும் நம்மை மீண்டும் மீண்டும் இந்தப் பாடலைப் பார்க்கவும் கேட்கவும் தூண்டுகிறது.

மலையும் மணலும் சகவாசி
அலையும் கடலும் சகவாசி
விதையும் மரமும் சகவாசி
எல்லாம் சகவாசி...

- என்று பாட்டின் பல்லவியைத் தென்றலாய்ப் பாடுகிறார் கதீஜா.

நதி நடக்கும் பொடி நடைக்கு
பறை அடிக்கும் அருவி
வலை விரி்த்த வேடனுக்கும்
விசிலடிக்கும் குருவி...
மிருகத்தின் மனிதத் தன்மை
மனிதத்தில் மிருகம் உண்மை!

- என்று கவித்துவமான அறிவின் சொல்லிசையில் புயல் ஒன்று புறப்படுகிறது.
மிகவும் சன்னமான, ஆனால் தீர்க்கமான குரல் வளம் கொண்ட கதீஜாவை அவர் வழக்கமாகப் பாடும் ஸ்தாயியைவிடச் (Octave) சற்று அதிகமான ஸ்தாயியில் பாடவைத்திருப்பது புதிய அனுபவமாக இருக்கிறது.

"கோக் ஸ்டுடியோ பல நாடுகளில் கலைகளை, கலைஞர்களை ஆதரிக்கும் பணியைச் செய்துவந்திருக்கிறது. பங்களாதேஷ், பாகிஸ்தானில்கூட இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் அதில் பாடியிருக்கின்றனர்.

இப்போது கோக் ஸ்டுடியோ தமிழ் சுயாதீன தமிழ் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் சீசனில் முதல் பாடல் வாய்ப்பை எனக்கு அளித்ததை மிகவும் பெருமையாக உணர்கிறேன். திரைப்படங்களுக்குப் பாடினாலும் மக்களிடம் கருத்துக்களை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் ஒரு சுயாதீனக் கலைஞரான நான், என்னைப் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

நான் பேசவேண்டியதை என்னுடைய பாட்டில் பேசியிருக்கிறேன். நீங்கள் நீங்களாகவே இருந்து இந்தப் பாடலை உருவாக்குங்கள் என்ற சுதந்திரத்தை `கோக் ஸ்டுடியோ தமிழ்' எங்களுக்கு வழங்கியது. கலை மக்களுக்கானது என்பதை உலகளாவிய ஒரு தலத்துக்குக் கொண்டு போயிருக்கும் கோக் ஸ்டுடியோ தமிழின் பங்கு மகத்தானது. என்னைப் போன்ற சுயாதீனக் கலைஞர்களுடன் ஏறக்குறைய 40 - 50 நாட்கள் சேர்ந்து பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.
கோக் ஸ்டுடியோ தமிழ் அமைப்பின் மூலமாக கானா, கிராமியக் கலைஞர்கள், ஒப்பாரிக் கலைஞர்கள் போன்ற பல விதமான இசை முயற்சிகளையும் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை மிகவும் ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன்" என்றார் சகவாசி பாடலை எழுதிப் பாடியிருக்கும் அறிவு.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x