

கிரிக்கெட்டில் ஒருவருடைய ‘கிராஃப்’ எப்போது மேலே ஏறும் என்று யாராலும் கணிக்க முடியாது. இதற்குச் சமீபத்திய உதாரணமாகியிருக்கிறார் இந்திய வீரர் சுப்மன் கில். இந்திய அணியில் நிலையில்லாமல் இருந்த சுப்மன் கில், தற்போது விஸ்வரூபம் எடுத்து அணியில் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக்கியிருக்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம்; இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் உள்பட 3 சதங்கள்; நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சதம் என்று தெறிக்கவிட்டிருக்கிறார். கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் சதமடித்த சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய வீரர்கள் அடங்கிய பட்டியலிலும் சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார். அவருடைய காட்டில் இப்போது ரன் மழை பொழிகிறது.
எம்மாம் பெரிய பீட்சா! - இன்றைக்கு எதை வேண்டுமானாலும் சாதனையாக்கிவிடலாம். அந்த வகையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் அண்மையில் பிரம்மாண்டமான பீட்சாவை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள். பீட்சா ஹட் நிறுவனத்தினரும் யூடியூபர் ஏர்ராக்கும் இணைந்து இந்தப் பிரமாண்ட பீட்சாவைத் தயாரித்துள்ளனர்.
14 ஆயிரம் சதுர அடியில் பீட்சா மாவை பரப்பி, அதன் மீது தாக்காளி சாஸ், சீஸ் ஆகியவற்றைச் சேர்த்து பீட்சாவைத் தயாரித்துள்ளனர். இந்தப் பீட்சாவைத் தயாரிக்க 2,244 கிலோ இனிப்பு சாஸ், 3,990 கிலோ சீஸ், 6,192 கிலோ மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பீட்சா கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
சாட்சோனிக் தெரியுமா? - செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ‘chatgpt’ பற்றிய பேச்சு உலகம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. ‘சாட்ஜிபிடி’ என்கிற செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் இருந்து தேவையான அனைத்துத் தகவல்களையும் மனிதர்கள் பெற முடியும். அதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கிருக்கின்றன.
அதற்குள் போட்டியாக ‘சாட்சோனிக்’ என்கிற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பற்றிய பேச்சு புறப்பட்டுவிட்டது. கூகுளின் தரவுகளைப் பயன்படுத்தி மனிதர்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் இது பதிலை அளித்துவிடுகிறதாம். எளிதாக ‘வாய்ஸ்’ கட்டளை மூலமாகவே ‘சாட்சோனிக்’கைத் தொடர்புகொள்ள முடியுமாம். இன்னும் என்னென்ன வருமோ?