

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வரிசையில் சமீபத்தில் ChatGPT என்கிற சாட் பாட் டிரெண்டானது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும்.
இந்தியாவைச் சேர்ந்த டிஜிட்டல் ஓவியர் மாதவ் கோலி என்பவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியாவின் பழங்கால மன்னர்களின் படங்களை வரைந்திருக்கிறார். சந்திரகுப்த மௌரியர் முதல் அலாவுதீன் கில்ஜி வரை அந்தக் காலத்து மன்னர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவம் கொடுத்திருக்கிறார். பள்ளிக்கூட வகுப்பில் இந்த மன்னர்களைப் பற்றிப் படித்திருப்போம். அவர்களைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்களைக் குறிப்புகளைக் கொண்டு இந்தத் தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக வரைந்திருக்கிறார் மாதவ் கோலி.
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி வரையப்பட்ட மன்னர்களின் படங்கள்: அசோகர், அக்பர், ஷாஜகான், பாபர், முதல் ராஜ ராஜ சோழன், ஜெஹாங்கிர் வரை மொத்தம் 21 மன்னர்களின் படங்களை வரைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அவர். ட்விட்டரில் வெளியான சில மணி நேரங்களில் வைரலான இந்தப் பதிவை சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்துகள் பதிவிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.
பெரும்பாலான ஓவியங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பது போன்று இருந்தாலும் சில படங்கள் வித்தியாசமானதாகவும் இருந்தன. பலரது லைக்ஸ்களை அள்ளிய இந்த பதிவுக்குப் பாராட்டுகளைத் தாண்டி சில எதிர்மறை கருத்துகளும் பதிவாகியிருந்தன. வரலாற்றில் குறிப்பிட்டது போல மன்னர்களின் படங்கள் இல்லை என்றும், ஒரே மாதிரியான முகத்தோற்றம் பயன்படுத்தியிருப்பதால் இந்து, முகலாய மன்னர்களிடத்தில் அதிக வேறுபாடு இல்லை என்றும் கருத்துகள் பதிவாகியுள்ளன.
மனித மொழியை இன்னும் நுட்பமாகப் புரிந்து கொள்ளும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் 2023ஐ ஆக்கிரமிக்கும் என்பது தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்பாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகம் கவனிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 2023ஆம் ஆண்டிலும் முக்கியத்துவம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.