இசையமைப்பாளர்கள் விரும்பும் புரோகிராமர்!

இசையமைப்பாளர்கள் விரும்பும் புரோகிராமர்!
Updated on
2 min read

இளம் இசையமைப்பாளர்களின் விருப்பத்துக்குரிய மியூசிக் புரோகிராமராகச் சுடர்விட்டுக்கொண்டிருப்பவர் மோனிஷ்குமார். இசையமைப்பாளர்கள் சி.சத்யா, ஜெய், பிரசாத் ஆகியோரிடம் மியூசிக் புரோகிராமராகப் பணி செய்திருக்கிறார். `நாடு', `போகாதே' சுயாதீன ஆல்பம், வைரமுத்துவின் `நாட்படு தேறல்' நூறு பாடல்களில் சிலவற்றில் இவரின் இசை ஒலித்திருக்கிறது.

“நான் படித்தது இசை. படித்துக்கொண்டிருப்பது இசை. படிக்கப்போவதும் இசை” என்று சொல்லும் மோனிஷ்குமார், ‘ஸ்விங் மியூசிக் அகாடமி’ என்னும் பெயரில் பியானோ வகுப்புகளை எடுக்கிறார். இவரிடம் அண்டை மாநிலங்கள் தாண்டி அமெரிக்கா, கனடா, துபாய், ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளிலிருந்தும் இசையைப் படிக்கின்றனர்.

மேற்குலக இசையையும் கர்னாடக இசையின் சிறப்புகளையும் ஒப்புமைப்படுத்தி வகுப்புகளை எடுக்கும் இவரது நேர்த்தியே கடல் கடந்து வாழும் மாணவர்களையும் இவர் பக்கமாக ஈர்த்திருக்கிறது.

கணினி, மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குத்தான் என்றில்லை, முறையாக இசையைப் படித்தாலும் அவர்களுக்கான பணி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் மோனிஷ் குமார்.

இவர் மூன்று வயதில் இசையை கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இசையில் பலமான அடித்தளத்துக்குப் பிறகு பியானோவிலும் மேற்குலக இசையின் தியரியிலும் லண்டன் டிரினிடி கல்லூரியின் எட்டு நிலைகளை மோனிஷ்குமார் முடித்தார்.

இந்திய இசைக்கும் மேற்கத்திய இசைக்கும் இருக்கும் ஆச்சரியமான ஒற்றுமையைப் பற்றிக் கேட்டால் மடை திறந்த வெள்ளம் போலக் கொட்ட ஆரம்பிக்கிறார். “நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. குறிப்பாக, கல்யாணி ராகத்தை மேற்குலக இசையில் (அதன் கமகங்கள் வேறாக இருந்தாலும் ஸ்வரங்கள் ஒன்றுதான்) ‘லிடியன்’ என்று சொல்வார்கள்.

அதேபோல், கீரவாணி ராகத்தை ‘ஹார்மோனிக் மைனர்’ என்பார்கள். இது போன்ற நிறைய ஒற்றுமைகளை இரண்டு இசையையுமே படித்திருக்கும் என்னால் அடையாளம் காண முடியும். அதைத் தகுந்த இடங்களில் கம்போஸிங்கின்போது பயன்படுத்துவேன்” என்கிறார் மோனிஷ்குமார்.

இந்தியாவில் சுயாதீன இசைப் பாடல்களுக்கு (Independent Music) தற்போது வரவேற்பு கூடியிருக்கிறது. தமிழில்கூட ஆரோக்கியமான வரவேற்பு இருக்கவும் செய்கிறது. இது பற்றி மோனிஷ்குமார் கூறுகையில், “சுயாதீன இசைப் பாடல்களுக்கான வரவேற்பும் ஆதரவும் முன்னெப்போதையும்விடத் தற்போது அதிகரித்துவரும் போக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் ‘மாஜா’ என்னும் அமைப்பின்கீழ் உருவாக்கிய ‘என்ஜாயி எஞ்ஜாமி’ போன்ற சுயாதீனப் பாடல்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. வீட்டிலேயே சிறிய அளவில் ஒருவர் உருவாக்கும் பாடலும் மிகப் பெரிய கம்போசர் ஒருவர் உருவாக்கிய பாடலும் ‘ஸ்பாடிஃபை’யில் நாம் கேட்பதற்கான வாய்ப்பை இன்றைய தகவல் தொழில்நுட்பம் அளித்திருக்கிறது. இந்தச் சமநிலை இளம் கலைஞர்களை இன்னமும் முன்னேற்றும்” என்கிறார்.

மேற்குலக இசையில் பக்தி, போராட்டம் எனத் தனித்தனியே இசை வடிவங்கள் இருக்கின்றன. இதில் ஜாஸ் வடிவமே தன்னை மிகவும் கவர்ந்தது என்கிறார் மோனிஷ். “ஜாஸ் எனப்படும் இசை வடிவமே உழைக்கும் கறுப்பின மக்கள் தங்களின் வாழ்க்கைப் பாடுகளை வெளிப்படுத்திய கலை வடிவம். இது உலக மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திய கலை வடிவம். பாப் மார்லியின் உத்வேகமான பாடல்கள் இசையையே அடக்குமுறைக்கு எதிரான ஆயுத மாக்கிய பெருமைக்கு உரியவை” என்கிறார் மோனிஷ்.

இன்று புதிய இசை முயற்சிகள் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டாலும், இதில் குறிப்பாக மூன்று பகுதிகள் முக்கியமாக விளங்குகின்றன. அது பற்றியும் தனக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள் பற்றியும் தன்னுடைய பார்வையைப் பகிர்ந்து கொண்டார் மோனிஷ்.

“மும்பையில் புதிய புதிய முயற்சிகளை இசையில் கண்டறிகிறார்கள். இது வரவேற்கவேண்டிய விஷயம். சென்னையிலும் கேரளத்திலும் நிறைய ஃப்யூஷன் பேண்ட்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். எப்போது கேட்டாலும் அவரின் இசையில் ஓர் ஆச்சரியம் ஒளிந்திருக்கும்.

சக மனிதர்களை நேசிப்பதில் கலைஞர்களை மதிப்பதில் இப்படியும் ஒரு மனிதரா என்று நான் ஆச்சரியப்படும் நபர் ஏ.ஆர்.ரஹ்மான். பின்தங்கிய எளிய சமூக பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு அவரின் கே.எம். மியூசிக் கன்சர்வேடரியில் இசைப் பயிற்சி அளித்து, அவர் களைக் கொண்டே ‘சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா’வை உருவாக்கிய பணி அசாத்தியமானது. பிரதீப்குமாரின் குரலில் வெளிப்படும் மென் சோகம் கேட்பவர்களின் இதயத்தைத் தொடும்.” என்கிறார் மோனிஷ்குமார்.

- வா .ரவிக்குமார்; ravikumar.cv@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in