

சமூக வலைத்தளத்தின் ‘புதிய டிக் டாக்’ எனச் சொல்லும் அளவுக்கு ரீல்ஸ் மயமாக இன்ஸ்டகிராம் மாறியிருக்கிறது. உலக அளவில் 100 கோடி இன்ஸ்டகிராம் பயனாளர்களில் இந்தியாவில் மட்டும் 23 கோடிக் கணக்குகள் உள்ளன. காணொளி ரீல்ஸ் மோகம் தலைக்கேறி வரும் நிலையில், இன்ஸ்டகிராமில் இனி ரீல்ஸ்க்குப் பதில் ஒளிப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனப் புதிய அறிவிப்பை இன்ஸ்டகிராம் வெளியிட்டிருக்கிறது.
2010இல் தொடங்கப்பட்ட இன்ஸ்டகிராமை, அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா நிறுவனம் வசப்படுத்தியது. பயனர்களின் அனுபவத்தை மெருகேற்ற அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது இன்ஸ்டகிராம். 2020ஆம் ஆண்டில்தான் ரீல்ஸை அறிமுகப்படுத்தியது. டிக்டாக் செயலிக்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், புதிதாக அறிமுகமான ரீல்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது. டிக்டாக் பயனர்கள் அப்படியே இன்ஸ்டகிராமுக்குத் தாவினர்.
மேலும், வீடியோவை எடிட் செய்ய வசதியாகப் பல புதிய அம்சங்களையும் இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்தியது. எனவே, சுட்டி முதல் பாட்டி வரை எளிமையாக ரீல்ஸை உருவாக்கி உலவவிட முடிந்தது. ரீல்ஸ் வருகைக்குப் பிறகு ஃபேஸ்புக், ட்விட்டர் செயலிகளையும் இன்ஸ்டகிராம் பின்னுக்குத் தள்ளியது. குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் 100 கோடிப் பயனர்களைப் பெற்றுத் திகைக்க வைத்தது இன்ஸ்டகிராம். இது அத்தனைக்குக் காரணம் ரீல்ஸ் மட்டுமே.
ரீல்ஸ்களுக்குப் பித்துப் பிடித்து அலையும் பயனர்கள் இருப்பதை உணர்ந்த மெட்டா நிறுவனம், ரீல்ஸ்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. இதனால், தொடக்கக் காலத்தில் ஒளிப்படங்களைப் பகிர்வதற்காக உருவாக்கப்பட்ட இன்ஸ்டகிராமில் ரீல்ஸ்களே நிரம்பி வழிந்தன.
இன்ஸ்டகிராம் பயன்படுத்துவோரின் முகப்புப் பகுதியில் பெரும்பாலும் ரீல்ஸ்களைக் காட்டும் வகையிலேயே அல்காரிதமும் உருவாக்கப்பட்டது. ரீல்ஸுக்கெனத் தனி பொத்தானை உருவாக்கி முதன்மையாக நடுவில் வைத்தும் விளம்பரப்படுத்தியது மெட்டா. இது ஒளிப்படப் பிரியர்களை கவலையடைய வைத்தது.
இப்படி ரீல்ஸ்களுக்காகத் தொடர்ந்து புதிய அம்சங்களைப் புகுத்திவந்த மெட்டா நிறுவனம், திடீரென புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது. எந்த மாற்றத்தையாவது கொண்டுவந்து பயனர்களைத் தக்கவைத்துக்கொள்ளத் திட்டமிடும் மெட்டா நிறுவனம், இந்த ஆண்டு முதல் இன்ஸ்டகிராமில் ஒளிப்படங்களுக்கே முதன்மையான வசதிகள் தரப்படும் என அறிவித்திருக்கிறது.
“காணொளிக் காட்சிகளுக்காகப் பல மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டோம். இனி இன்ஸ்டகிராம் என்றைக்கும் ஒளிப்படங்களுக்கான இடமே. இனி வரும் காலத்தில் காணொளிக் காட்சிகள், ஒளிப்படங்களுக்கு இடையேயான சமநிலையைப் பின்பற்ற இருக்கிறோம்” என மெட்டாவின் தலைமைச் செயல் அதிகாரி ஆடம் மொசரி அறிவித்திருக்கிறார்.
ஆக, பயனர்கள் எண்ணிக்கையைக் கூட்ட இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மெட்டா. தக்க சமயத்தில் சுதாரித்துக்கொண்டு புதிய அம்சங்களைப் புகுத்துவதால்தான் சமூக வலைத்தளத்தில் வல்லவனாக இன்ஸ்டகிராம் நீடிக்கிறது.