

கல்லைக் கொண்டு வீடு கட்டலாம், சிலை வடிக்கலாம், கல்வெட்டு பொறிக்கலாம். ஆனால், கல்லை வைத்து மனம்போன போக்கில் வடிவங்களை உருவாக்க முடியுமா? ‘முடியும்’ என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஸ்பெயினைச் சேர்ந்த ஜோஸ் மனுவேல் கேஸ்ட்ரோ லோபெஸ் எனும் கலைஞர்.
சிறியதும் பெரியதுமான கற்களைக் கொண்டு சப்பாத்தி, பூரிக்கு மாவைப் பிசைந்தால் தோற்றமளிக்கும் வடிவங்களைப்போல் சிற்பங்களைச் செதுக்கி அசத்துகிறார் லோபஸ். இதற்காகக் கருங்கல், கூழாங்கல், பளிங்கு, கிரானைட் கற்கள் என்று கையில் கிடைக்கும் கற்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான வடிவங்களை உருவாக்கியிருக்கிறார் இவர்.
“சிற்பங்களை வடிக்க எந்தவிதத் திட்டமிடலும் தீர்மானமும் வைத்துக்கொள்வதில்லை. விளையாட்டாக செய்யத் தொடங்கி, இன்றைக்கு நூற்றுக்கணக்கான கற்சிற்பங்களாக உருப்பெற்றிருக்கின்றன” என்கிறார் லோபஸ். “கற்களுக்கும் எனக்குமான பிணைப்பு உணர்வுரீதியானது. கற்கள் எனக்குக் கீழ்ப்படிகின்றன, வளைந்து கொடுக்கின்றன. நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறோம். கல்லில் தேவையற்ற பகுதிகளை கருவிகளின் உதவியோடு நீக்குகிறேன், அவ்வளவுதான். அவைகள் வடிவங்களாக மாற்றம் பெறுகின்றன” என்று கற்களுக்கும் தனக்குமான உறவை விளக்குகிறார் லோபஸ்.
புத்தக வடிவம், மனித உடல் பாகங்கள், சதைத் திரட்சி, ஆடை மடிப்பு எனப் பார்ப்பவர்களின் ரசனைக்கேற்ப அழகியலோடும் தனித்துவத்தோடும் இவரது சிற்பங்கள் தோற்றம் அளிக்கின்றன. லோபஸ் வடித்த அழகிய கற்களின் வடிவங்கள் சில உங்கள் பார்வைக்கு...