Published : 27 Jan 2023 07:47 PM
Last Updated : 27 Jan 2023 07:47 PM

‘தொடங்கிய இடத்தில் நிறைவு’ - டென்னிஸ் நட்சத்திரம் சானியாவின் கம்பேக் கதை!

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கிராண்ட் ஸ்லாம் பயணம் இன்று முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாடிய சானியா - ரோஹன் போபன்னா இணை தோல்வியைத் தழுவியிருந்தாலும் அரங்கம் நிறைந்த கைதட்டல்களுடன் விடைபெற்றார் சானியா.

கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் விளையாடும் அவர் இந்திய டென்னிஸ் களத்தில் பெண்களுக்கு ஒரு முன்னோடி. 2013ஆம் ஆண்டு ஒற்றையர் பிரிவுப் போட்டிகளில் ஓய்வை அறிவித்த அவர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் கவனிக்கத் தக்க வெற்றிகளைப் பதிவுசெய்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் 2015 அமெரிக்க ஓபன், விம்பிள்டன் தொடர்களிலும் 2016 ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலும் பட்டம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் 2009 ஆஸ்திரேலிய ஓபன், 2012 பிரஞ்சு ஓபன், 2014 அமெரிக்க ஓபன் ஆகிய தொடர்களில் பட்டம் வென்றார். விரைவில் ஓய்வுபெற இருக்கும் அவர் தனது டென்னிஸ் பயணத்தில் உலக தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 91 வாரங்களுக்கு முதல் இடத்தையும், ஒற்றையர் பிரிவில் அதிகபட்சமாக 27ஆவது இடத்துக்கும் முன்னேறி அசத்தியவர்.

2023ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்கும் முன் கடைசியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பங்கேற்றிருந்தார். 2018ஆம் ஆண்டு குழந்தை பிறந்ததை அடுத்து டென்னிஸ் விளையாட்டுக்குச் சில காலம் சானியா இடைவெளி விட்டிருந்தார். 2010இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலி - சானியா திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தகுந்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடும் பயிற்சி மேற்கொண்டு 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார். அங்கிதா ரெய்னாவுடன் மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடிய அவர் முதல் சுற்றிலேயே வெளியேறினார். குழந்தை பிறப்புக்குப் பின் ஏற்பட்ட அதிக உடல் எடை பிரச்சினை, முழங்காலில் காயம் உள்ளிட்ட காரணங்களால் விளையாட்டில் சோபிக்க முடியாத அவர் அதே ஆண்டு கம்-பேக்கும் கொடுத்தார். துபாயில் நடைபெற்ற ஹோபார் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்று விளையாட்டில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார்.

ஆனால், அந்தப் பயணம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவ்வப்போது காயங்கள் ஏற்பட்டு உடல் ஒத்துழைக்காததால் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற இருப்பதாக அறிவித்தார். களத்தில் போராடும் குணம் கொண்ட சானியா தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரைச் சாதாரணமாக முடித்துக்கொள்ளத் தயாராக இல்லை. தீவிர உடற்பயிற்சி செய்த அவர் உடல் எடையைக் குறைத்து ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்கான பயிற்சியையும் தொடங்கினார்.

சிறப்பாக விளையாடத் தேவையான உடற்தகுதியை அடைந்தப் பின் களத்தில் இறங்கத் தயாரானார் அவர். கடந்த சில ஆண்டுகளாக நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் சானியா, 2023 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கடும் போட்டிக்கு மத்தியில்தான் விளையாடினார். முதல் சுற்றிலிருந்தே ரோஹன் போபன்னாவுடன் சிறப்பாக விளையாடிய அவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி வரை முன்னேறினர். 18 ஆண்டுகளுக்கு முன்பு 2005 ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடியதன் மூலம் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் கால் பதித்த சானிய இன்று அதே தொடரில் தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடி விடைபெற்றிருக்கிறார்.

போட்டி நிறைவில் கண்ணீர் மல்க பேசிய சானியா, “ 2005ஆம் ஆண்டு இதே கிராண்ட் ஸ்லாமில் தொடங்கிய எனது பயணம் இன்று இங்கேயே நிறைவுப்பெறுகிறது. எனது நான்கு வயது மகன் முன்னிலையில் கிராண்ட் ஸ்லாம் தொடரில் விளையாடுவேன் என ஒருபோதும் நினைக்கவில்லை.” என்றார். சானியாவை இந்திய டென்னிஸ் வரலாறு என்றைக்கும் மறக்காது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x