

அந்த நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தான் வெகுளி வெள்ளைச்சாமி. அவனுக்கு ஒரு நூறு ரூபாய் வேண்டும். அதை எடுப்பதற்காகத் தான் அந்த ஏடிஎம்மின் வரிசையில் அவன் நின்றிருந்தான். அவனுடைய காதலிக்கு அடுத்த மாதம் 15-ம் நாளன்று பிறந்தநாள். அந்த நாளுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் இருந்தது. அவளுக்குப் பரிசாக ஆண்டுதோறும் ஏதாவது ஒரு அபூர்வப் பரிசு கொடுப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான். எனவே, இந்த ஆண்டு அவன் ஒரு நூறு ரூபாய்த் தாளை அவளுக்குத் தர வேண்டும் என்று நினைத்திருந்தான்.
அதை எடுக்க அவனது ஊரில் உள்ள ஏடிஎம்களில் எல்லாம் பயங்கரக் கூட்டம். அங்கே பணம் எடுக்க நின்றால் எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும் என்று தொலைக்காட்சிக் கணக்கெடுப்புகளால் அறிந்துகொண்டான். ஆகவே, அறுநூறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு ஏடிஎம்மைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வந்திருந்தான்.
இந்த ஏடிஎம்முக்கு வர அவனுக்குச் செலவு ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. அவனிடமிருந்த கிரடிட் கார்டைப் பயன்படுத்தி டிக்கெட் எடுத்திருந்தான். கிட்டத்தட்ட அவன் வரிசைக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அருகிலுள்ள பொதுக் கழிப்பறையில் காலைக் கடன்களை முடித்து அங்கேயே குளித்துவிடுவான். அங்கே கிரடிட் கார்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பக்கத்துக் கடைகளில் உணவு உண்பான். இரவில் நிற்கும் இடத்திலேயே படுத்துக்கொள்வான். அங்கே இருந்த எல்லோருமே அந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்டனர்.
அதனால் அதைப் பற்றி எல்லாம் அவனுக்குக் கவலை இல்லை. மேலும் பிரதமரின் கரத்தை வலுப்படுத்தத் தான் ஒரு படை வீரனாகிவிட்ட உற்சாகம் அவனுக்கு. இடையிடையே அவன் தொடையைப் பறட்டு பறட்டு என்று சொரிந்துகொள்வான். அவ்வப்போது காதில் விழும் பிரதமர் வாழ்க என்ற கோஷம் அவனைப் போன்றவர்களை உற்சாகப்படுத்தும். நாட்டிலேயே இந்த ஏடிஎம்மில்தான் வரிசையில் நிற்கும் நபர்களின் எண்ணிக்கை குறைவாம். அதை நாளிதழ்களில் படித்த பின்னர்தான் இந்த ஏடிஎம்முக்கு வெள்ளை வந்திருந்தான்.
இந்த ஏடிஎம் வரிசையில் நிற்கும் ஒருவர் ஒரு மாதத்தில் ஏடிஎம்மை அணுகிப் பணம் எடுத்துவிட முடியுமாம். அதுவும், நாளிதழ்களில் இந்த ஏடிஎம் குறித்த ஸ்டோரி வெளியான பின்னர்தான் இங்கே கூட்டம் அதிகமாகிவிட்டதாம். அதற்கு முன்னர் இருபது நாள்களில் ஏடிஎம்மை அடைந்துவிட முடிந்திருக்கிறது. நூறு ரூபாய்த் தாளில் காதலியின் பெயரையும் பிறந்தநாள் வாழ்த்தையும் அழகாக எழுதிக் கொடுக்கப் போகும் அந்தத் தருணத்தை நினைவில் ஏந்தியபடியே வரிசையில் நகர்வான் வெள்ளை. பையிலுள்ள டெலஸ்கோப்பால் அவ்வப்போது ஏடிஎம்மைப் பார்ப்பான். வெகு தொலைவில் ஒரு சிறு புள்ளியாக அது தெரியும். அந்தப் புள்ளி ஒவ்வொரு நாளும் அவனது டெலஸ்கோப்பில் பெரிதாகிக்கொண்டே வருவதைக் காணும்போது அவன் உற்சாக மிகுதியால் விசிலடிப்பான்.
கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் கள்ள நோட்டைத் தடுக்கவும் பிரதமர் அறிவித்த பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெள்ளையை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. கறுப்புப் பணத்தாலும் கள்ள நோட்டாலும் நாடு சீரழிவதைத் தடுக்க இது போன்ற நடவடிக்கையை இதுவரை வேறு யாருமே எடுத்ததில்லை என்பதில் வெள்ளைக்கு ஒரே பெருமை. கையால் யாரும் பணத்தைத் தொடக் கூடாது என்று அவர் அறிவித்துவிட்டார். ஆகவே, யாரும் அதை மீறுவதில்லை. அப்படியே பணத்தைத் தொட வேண்டியது வந்தாலும் தங்களிடமிருக்கும் கையுறையை அணிந்தே பணத்தைத் தொட்டனர். இதைக் குறித்த தனது பெருமையை பிரதமர் தன்னுடைய உரையில் அடிக்கடி வெளிப்படுத்தினார்.
சரியாக இருபத்தெட்டாவது நாளிலேயே வெள்ளை ஏடிஎம்மை அடைந்துவிட்டான். இதுவரை பத்தாயிரம் ரூபாய் வரையில் செலவழிந்துவிட்டது. ஒரு நூறு ரூபாய்க்காகப் பத்தாயிரம் ரூபாய் செலவழித்தபோதுதான் நூறு ரூபாயின் அருமை வெள்ளைக்குத் தெரிந்தது. அப்போது அவனுக்கு பிரதமரை நினைத்துப் பெருமிதம் பொங்கிவழிந்தது. அது அதிகமாகப் பொங்கிவிடவே அந்தப் பெருமிதத்தை அங்கிருந்த அண்டாவில் அப்படியே ஊற்றிவைத்தான். அதில் எப்போதுமே பிரதமர் குறித்த மக்களின் பெருமிதம் பொங்கி வழிந்தபடியே இருந்தது.
நாடெங்கும் இந்தப் பெருமிதம் ஒரு நதி போல் பாய்ந்தது. இந்த நதியின் கரையில் விவசாயத்தை மேற் கொள்ளலாம் என ஒரு யோகி பிரதமருக்கு ஆலோசனை தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி கசிந்தது. யோகியுடன் பிரதமர் பெருமையுடன் சிரித்தபடி கம்பீரமாக நிற்கும் அந்தப் படம் நாடெங்கும் மின்னல் வேகத்தில் பரவியது.
ஏடிஎம்மில் எடுத்த நூறு ரூபாய்த் தாளில் காதலிக்கு வாழ்த்தை எழுதி அவளைப் பார்க்க விரைந்தான் வெள்ளை. வெகு தூரத்திலேயே அவனைக் கண்டுகொண்ட அவளும் ஸ்லோமோஷனில் ஓடிவந்தாள். இருவரும் அருகருகே வந்த உடன் சிறிது நேரம் இமைக்காமல் பார்த்துக்கொண்டனர். வானில் புறாக்கள் பறந்தன. நதியில் நீர் சில்லென்று ஓடியது. கடலில் அலைகள் வந்து வந்து மோதின. மறுபடியும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அப்போது அவளைக் கட்டியணைக்க வெள்ளை எத்தனித்தான்.
ஆனால் அவனிடம் அகப்படாமல் ஓடினாள் அவனுடைய காதலி. தான் அவளுக்காக ஓர் அரிய பரிசுப் பொருள் கொண்டுவந்திருப்பதாக அவன் கூறிய பின்னர்தான் அவள் நின்றாள். காதலுடன் அவன் அவள் முகத்துக்கு எதிரே அந்த நூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினான். அவள் முகம் மலர்வாள் என்று எதிர்பார்த்த அவனுக்குப் பலத்த அதிர்ச்சி. அவள் கடுங்கோபத்துடன் பார்த்தாள். உடனே தன்னிடமிருந்த நாளிதழை எடுத்துக் காட்டினாள். நூறு ரூபாயும் செல்லாது என பிரதமர் நேற்றிரவு லட்சத்து ஓராவது அறிவிப்பை வெளியிட்டிருந்ததை அந்தச் செய்தித்தாள் தலைப்பாகக் கொண்டிருந்தது.