

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி திரையரங்குகளில் கொண்டாட்டம், ஆர்ப்பாட்டம், பேனர் கிழிப்பு, உயிரிழப்பு எனப் பொங்கலுக்கு முன்பு பல விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறின. ‘பொங்கல் வின்னர் எது?’ என்கிற வாதம் இன்னும்கூட ஓய்வதாகத் தெரியவில்லை. பல தலைமுறைகளாக இருதுருவ மோதல்கள் இருந்தாலும், இந்த இணைய யுகத்தில் நடக்கும் கூத்துகளுக்கு முடிவில்லையா என்றால் ‘நிச்சயம் இப்போது இல்லை’ என்று அடித்துச் சொல்ல முடியும்!
உக்கிரமாகும் ரசிகர்கள்: இந்தக் காலத்தில் ஒரு திரைப்படத்தின் அறிவிப்பை அடுத்து, படப்பெயர் அறிவிப்பு, கதாபாத்திர அறிவிப்பு, முதல் பாடல், டீசர், டிரெய்லர் எனப் படம் வெளியாகும் வரை ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலையிலேயே வைத்திருக்கிறார்கள்.
தெரிந்தே ரசிகர்களைக் கட்டி வைத்திருப்பது ஒரு ரகம் என்றால், ‘அப்டேட்’ இல்லையென்றாலும் அத்திரைப்படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுப் பேசுபொருளாக வைத்திருப்பது இன்னொரு ரகம். குறிப்பாகச் சமூக வலைத்தளங்கள்தாம் இதில் பெரும் பங்காற்றுகின்றன. ரசிகர்களின் மோதலுக்குக் களம் அமைத்துக்கொடுப்பதும் சமூக வலைதளம்தான் என்கிறார் சினிமா ஆர்வலர் இளம்பரிதி கல்யாணகுமார்.
“எம்.கே.டி. பாகவதர் - பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் எனக் காலத்துக்கும் இரு துருவ மோதல் வியாபாரத்துக்காகக் கட்டமைக்கப்படுகிறது. இதில் இளம் தலைமுறையினர் சிக்கிக்கொள்வதுதான் வேதனை. முன்பு திரைப்படங்கள் வெளியாகும் நாளில் மட்டும் இருந்த ரசிகர் மோதல் சமூக வலைத்தளத்தால் எல்லா நாட்களிலும் தொடர்கிறது.
படத்தின் விமர்சனத்தைத் தாண்டி அப்படத்தின் விளம்பரத்துக்காக வெளியிடப்படும் படைப்புகளின் வியூஸ், லைக்ஸ், ஷேரிங் எண்ணிக்கையைப் பொறுத்து படத்தின் வெற்றியைப் பதிவுசெய்ய இன்றைய இளம் ரசிகர்கள் போராடுகிறார்கள். இந்தச் சமூக வலைத்தள மோதல் படிப்படியாக உக்கிரமாகி திரையரங்குகளிலும் மோதலாக வெடிக்கிறது” என்கிறார் இளம்பரிதி.
உயிரைப் பறித்த கொண்டாட்டம்: அண்மையில் நடைபெற்ற படக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரம்பு மீறிய சாகசச் செயலால் சென்னையில் 19 வயதே நிரம்பிய ஓர் உயிரும் பறிபோனது. இதற்கு முன்பும் கட் அவுட்டுக்கு மாலை சூட்டும்போது கீழே தவறி விழுந்தவர்கள் ஏராளம். இதுபோன்ற சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஒரு அபாயச் சங்காக ஒலித்தாலும், அதை மறந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவதும் தொடர்கிறது.
“ரசிகர் மோதலின் எல்லைமீறலைச் சுட்டிக்காட்ட ஒவ்வொரு முறையும் ஒரு மரணம் நிகழ வேண்டுமா என்கிற கேள்வியை இது எழுப்புகிறது” என்கிறார் ஊடகவியலாளர் செலினா ஹஸ்மா. “இதுபோன்ற தருணத்தில் குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் இருந்திருந்தால் சில அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம்” என்கிறார் அவர்.
பொங்கலுக்கு வெளியான படங்களால் ரசிகர்கள் ஏற்படுத்திய விரும்பத்தகாத நிகழ்வுகளின் தாக்கம் மறைவதற்குள்ளாகவே அடுத்த அலைக்கு ஆயுத்தமாகிவிட்டனர் ரசிகர்கள். ‘தளபதி67’, ‘ஏகே62’ என அடுத்த ‘அப்டேட்’டுகளைக் கிண்டத் தொடங்கிவிட்டனர். ஒரு சினிமாவின் வெளியீட்டுக்காக அதிக நேரத்தைச் செலவிட வேண்டாம், படிப்பில் கவனம் செலுத்துங்கள், குடும்பத்தைப் பாருங்கள் என அந்தந்த நடிகர்களே கோரிக்கை விடுத்தாலும் ரசிகர்கள் செவிசாய்ப்பதாக இல்லை. இதனால், ரசிக மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் சவாலானதாக மாறி வருகிறது.
வலையில் ரசிகர்கள்: “பிடித்த நடிகரின் திரைப்பட ‘அப்டேட்’டைப் பின்தொடர்வதைவிட எதிரணி நடிகரின் திரைப்பட பாதகங்களைச் சுட்டிக்காட்டுவதில் சில ரசிகர்களின் ஆர்வ மிகுதியைச் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. பொழுதுபோக்கிற்காகத் திரைப்படங்கள் என்கிற காலம் மாறி, வியாபார நோக்கத்துக்காக என்று குறுகிவிட்டது. இந்த வியாபார வலைக்குள் தெரிந்தோ தெரியாமலோ ரசிகர்களும் சிக்கியிருப்பது உண்மையில் மாற வேண்டிய விஷயம்” என்கிறார் இளம்பரிதி.
சினிமா என்பது மனித வாழ்க்கையில் ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. அது எந்த நிலையிலும் வாழ்க்கையில் முதன்மையானது அல்ல. ஒரு படத்துக்காகத் தெருவில் இறங்கி மோதிக்கொள்வது, அலப்பறைகள் செய்வது, சமூக வலைத்தளங்களில் வசைபாடிக் கொள்வது என எதுவுமே யாருடைய வாழ்க்கையையும் வளமாக்கப்போவதில்லை. இனியாவது இளைய தலைமுறையினர் அதை உணர்ந்து திருந்திக்கொள்வது அவர்களுக்கு மட்டுமல்ல, கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோருக்குச் செய்யும் கடமையும்கூட!