

கன்னையா குமார்
புதுடெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவரான கன்னையா குமார் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவுடன் நாடெங்கும் பிரபலமானார். முதலாளித்துவம், சாதியம் போன்றவற்றிலிருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று அவர் பேசியதைக் காஷ்மீருக்கு விடுதலை தர வேண்டும் என்று பேசியதாகத் திரித்து வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. கன்னையா குமார் கைதைத் தொடர்ந்து தேசியவாதம் குறித்த சொல்லாடலும், மாணவ அரசியல் இயக்கங்களும் எல்லாம் நாடு முழுக்கச் சூடுபிடித்தன. இந்திய மாணவர்களின் அரசியல் முகமாக 2016-ல் கன்னையா குமார் உருவெடுத்தார்.
ரானா அயூப்
‘தெஹல்கா' பத்திரிகையில் ஏழு ஆண்டுகள் ‘சீனியர் எடிட்டர்' ஆகப் பணியாற்றியவர் ரானா அயூப். இவரின் செய்திக் கட்டுரைகளால் குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, குஜராத் கலவரம் தொடர்பாக 2010 முதல் 2011 வரை எட்டு மாதங்களுக்கு, மைதிலி தியாகி என்ற பெயரில் ‘அண்டர்கவர் இன்வெஸ்டிகேஷன்' மூலம் பல உண்மைகளை ரானா வெளிக்கொண்டுவந்தார். அவரது புலனாய்வு முடிவுகளைப் புத்தகமாக வெளியிட யாருமே முன்வராத நிலையில், தனது கைக்காசைப் போட்டு ‘குஜராத் ஃபைல்ஸ்: அனாடமி ஆஃப் எ கவர் அப்' என்ற தலைப்பில் அவரே ஆங்கிலத்தில் வெளியிட்டார். துணிச்சலான பத்திரிகையாளரின் அடையாளம் ரானா அயூப்.
ரோஹித் வெமுலா
ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரான ரோஹித் வெமுலாவின் தற்கொலை நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் அம்பேத்கர் மாணவர் அமைப்பில் பணியாற்றிவந்தார். இந்த அமைப்பினருக்கும் அகிலப் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் ரோஹித் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மனமுடைந்த வெமுலா தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலை ‘ஒரு கல்வி நிறுவனத்தின் கொலை’ என்று தேசிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. அவர் எழுதிய கடைசிக் கடிதமும் பரவலாகப் பகிரப்பட்டது.
டீனா டாபி
2015-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் முதல் இடத்தைப் பிடித்தவர் டீனா டாபி. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு வயது இளம்பெண் யூ.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சிபெறுவது இதுவே முதல்முறை என்பதால் அவருடைய வெற்றி நாடெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்றது.
ஆலியா பட்
பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் நடிப்பில் இந்த ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இருபத்தி மூன்று வயதில் இவர் தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் இந்த ஆண்டின் முக்கியமான கதாநாயகியாக இவரை மாற்றியிருக்கின்றன. ‘உட்தா பஞ்சாப்’, ‘டியர் ஜிந்தகி’ போன்ற படங்களில் இவருடைய நடிப்பும் பரவலான பாராட்டைப் பெற்றது.
ராம்
அறிமுக இயக்குநர் ராம் ரெட்டி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படம் ‘திதி’. சர்வதேச விருதுகள், தேசிய விருது எனப் பல்வேறு விருதுகளை இந்தப் படம் பெற்றது. கர்நாடகாவின் மாண்டியா கிராமத்தைச் சேர்ந்த சாதாரண மக்களே இந்தப் படத்தில் நடித்திருந்தது சிறப்பம்சமாக அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் இளம் வயதிலேயே கன்னடத் திரைப்பட உலகில் முக்கிய நபராக மாறியிருக்கிறார் ராம் ரெட்டி.