

‘வெந்து தனிந்தது காடு.. எங்களுக்கு பிடித்தப் பாட்டை போடு.’ என்று 2022ஆம் ஆண்டில் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படப் பாடல்கள் சில:
காதல் மலர்ந்த இளசுகளுக்குத் தினுசாகப் பூத்த பாடல் இது. ரம்மியமான அந்தப் பாடல், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா..’. யூடியூபில் 8.9 கோடிப் பார்வை யாளர்களைக் கடந்தது இப்பாடல்.
ராஜா காலத்து உடைகளைப் பார்த்தாலே தலைத் தெறிக்க ஓடும் இந்தக் கால இளைஞர்களை, முணுமுணுக்க வைத்தது, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதி..’ பாடல். யூடியூபில் 6.5 கோடிப் பார்வையாளர்களைக் கண்டது.
வஞ்சிக்கோட்டை வாலிபனின் லேட்டஸ்ட் வெர்ஷனாக குத்தாட்டம் போட வைத்தது, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம் பெற்ற ‘டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ’ பாடல். டியூபில் 8.8 கோடிப் பார்வைகளைப் பெற்றது இப்பாடல்.
பிணக்கில் இருந்தவர்களையும் இணக்கமாக்கி கிறங்கடிக்க வைத்த இன்பமயமான பாடல் இது. யூடியூபில் 7.1 கோடிப் பார்வையாளர்கள் பார்த்து ரசித்த அப்பாடல், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம் பெற்ற ‘ஏ மல்லிப்பூ..’.
சுட்டி முதல் பாட்டி வரை அனைவரையும் ஆட வைத்தது இப்பாடல். யூடியூபில் 2.9 கோடிப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய அந்தப் பாடல் ‘ப்ரின்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி..’
இது யூத்களின் பல்ஸ் அறிந்து ரசிக்க வைத்த பாடல். பைக்கில் ரெய்டு போகத் துடிக்கும் மாமா குட்டிகளைக் கொண்டாட வைத்த பாடல். யூடியூபில் 12.5 கோடிப் பார்வையாளர்களைப் பரவசப் படுத்திய அப்பாடல், ‘தி வாரியர்’ படத்தில் இடம் பெற்ற ‘புல்லட்டு..’.
வரிகள் புரியவில்லை என்றாலும் பாஷை தெரியாதவர்களும் ரீல்ஸ் செய்த பாடல் இது. அரபி குத்து என்ற அடைமொழியோடு ஆட்டம் போட வைத்த அப்பாடல், ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘மலம பித்தா பித்தாதே..’. . யூடியூபில் 36 கோடிப் பார்வையாளர்களைப் பெற்றது.
திருமண வரவேற்பில் இளம் ஜோடிகளை நடனம் ஆட வைத்த பாடல் இது. புல்லிங்கோக்களைப் புல்லரிக்க வைத்து, யூடியூபில் 6.7 கோடிப் பார்வையாளர்களை உற்சாகப்படுத்திய ‘டான்’ படத்தில் இடம் பெற்ற ‘மாடன் ரதியே’ பாடல்.
கிராமத்துப் பசங்க மத்தியில்ரவுசு காட்டிய பாடல் இது. யூடியூபில் 3.5 கோடிப் பார்வையாளர்கள் கண்டுகளித்த ‘விருமன்’ படத்தில் இடம் பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல்.
பதின் பருவ பசங்க முதல் பலரையும் டண்டணக்ககா போட வைத்த பாடல் இது. யூடியூபில் 10.1 கோடிப் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தது, ‘விக்ரம்’ படத்தில் இடம் பெற்ற ‘பத்தல...பத்தல...’ பாடல்.
திருவிழா காலங்களில் ஒலிபெருக்கியில் அலறிய பாடல். கல்லூரிக் கலை நிகழ்ச்சிகளில் முதன்மையாக இடம் பிடித்தது. யூடியூபில் 2.4 கோடிப் பார்வையாளர்கள் ரசித்த ‘வலிமை’ படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாதிரி...’ பாடல்.
(இப்பாடல்கள் வரிசைப்படுத்தப்படவில்லை.)