அலையோடு விளையாடு! 15 - தோலுக்குள் இறங்கிய குளிர் ஊசிமுனைகள்

அலையோடு விளையாடு! 15 - தோலுக்குள் இறங்கிய குளிர் ஊசிமுனைகள்
Updated on
2 min read

லே நகரத்தில் பேட்லிங் செய்வதற்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். இந்த நகரம் லடாக் பகுதியின் தலைமையகம். லே இந்தியாவின் 2-வது மிகப் பெரிய மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மலைப்பகுதி இல்லையா, அதனால் மக்கள் குறைவாக வசித்தாலும் பரப்பளவில் மிகப் பெரியது.

மெய்சிலிர்த்தேன்

1959-லிருந்து திபெத்தியர்களின் முக்கியமான பவுத்தப் பண்பாட்டு மையமாக இந்தப் பகுதி மாறியிருந்தது. அந்தக் காலத்தில் இந்தியாவுக்குள் கால்நடையாக நுழையும் வணிகர்கள் இந்தப் பகுதியில் தங்கி, பிறகு புறப்படும் இடமாக இருந்தது. இப்போது இதன் வழியாகவே காஷ்மீருக்குத் தரைவழியாகச் செல்கிறார்கள்.

இப்பகுதி முக்கியமான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. சாகச விளையாட்டுகளுக்கும் உகந்தது. எப்போதும் மலையேற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடமும்கூட.

இந்திய ராணுவத் தளம், புராதன அரண்மனை, கார்கில் போர் நினைவுச் சின்னம் போன்றவை இங்கு முக்கியமாகப் பார்க்க வேண்டியவை. அத்தனை உயரத்தில், பனிப்பாறைகளுக்கு நடுவே ராணுவ வீரர்களின் சேவை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

பனிச்சரிவைத் தாண்டி

லே ஏரியில் பேட்லிங் செய்யவே எங்கள் பயணம் தொடர்ந்தது. ஆனால் அந்த ஏரியோ இந்தியா, திபெத், சீனா எனச் சிக்கலான பகுதியில் இருந்தது. இந்திய எல்லைக்கோடு, ராணுவத் தளம், 3 பிரதிநிதிகளிடம் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம் போன்றவை இருந்தன. இதன் காரணமாக அங்குப் பேட்லிங் செய்வது மிகக் கடினமாக இருக்கிறது.

ஒரு நாள் ஓய்வு எடுத்தது எங்கள் உடல்நிலையைப் பயணத்துக்குத் தயார் செய்திருந்தது. அடுத்த நாள் நாங்கள் சென்ற இடம் பேங்காங் (Pangong). இது லேவுக்குக் கிழக்கில் இருக்கிறது. ஒரு பெரிய மலைத் தொடரையும், சாங்லா என்ற கணவாயையும் கடந்தோம். இந்தக் கணவாய் 17,590 அடி உயரம் கொண்ட உலகின் 2-வது உயரமான சாலை. இதைக் கடப்பது மிகப் பெரிய சவால். ஏனென்றால், பனிச்சரிவு நடைபெறும் இடம் இது.

குளிர்காலத்தில் இந்தச் சாலை மூடப்பட்டுவிடும். நாங்கள் அதைக் கடந்து சென்று, உலகின் மிக உயரமான பகுதியில் தேநீர் அருந்தினோம். இந்த இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நிறைந்திருந்தார்கள். அங்கே 20-25 நிமிடங்களுக்கு மேல் தங்கக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்தார்கள்.

உறைந்தும் உறையாமலும்

லேசாகத் தலைவலிக்க ஆரம்பித்தது. கீழே இறங்க ஆரம்பித்தோம். வலது பக்கம் திடீரென்று தோன்றியது அழகான மிகப் பெரிய ஏரி. அதன் பெயர் ட்சால்டக்.

பனிச்சிகரங்கள் உருகி, ஆறாக ஓடிவந்து, நிலம் சரிவாக இருக்கும் காரணத்தால் இயற்கை அணையாக உருவாகி இங்கு ஏரி உருவாகியிருக்கிறது. ஆண்டில் 9 மாதங்களுக்குப் பனியாக உறைந்து கிடக்கும். 3 மாதங்களுக்குத்தான் இங்கே தண்ணீரைப் பார்க்க முடியும். ஏரியின் பாதியளவு ஆழமற்றும், பாதி நல்ல ஆழத்துடன் தெள்ளத் தெளிவாகக் கண்ணாடியைப் போலவும் ஜொலித்தது. சுற்றிலும் பனிச்சிகரங்கள் சூழ்ந்து நின்றது நீரில் பிரதிபலித்தது. ஊசிமுனைகள் தோலுக்குள் இறங்கிக் குத்துவது போன்ற குளிர். யோசனையுடன் கீழே இறங்கினேன்.

மத்தியப் பகுதியை நதிகளின் பூமி எனலாம். இங்குக் கங்கை பிரம்மாண்டமாகிவிடுகிறது. அதற்குக் காரணம் கோசி, கந்தக், சோன், காக்ரா என நான்கு முக்கிய ஆறுகள் சேர்வதுதான்.

பிஹாரின் சுல்தான்கஞ்சிலிருந்து நாங்கள் புறப்பட்டு விக்ரம்ஷீலா ஒங்கில் சரணாலயத்தைக் கடந்து வந்தோம். இது ஆற்று ஓங்கில்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரேயொரு சரணாலயம். இந்தப் பயணத்தில் இதுவரை 800 ஓங்கில்களைப் பார்த்திருக்கிறேன். நதி அகலமாகவும் ஆழமாகவும் இருப்பதால், பெரிய பெரிய அலை அடிக்கிறது. இதனால் பேட்லிங் செய்ய ரொம்ப கஷ்டப்பட்டோம். பாகல்பூர் பகுதி கங்கை ஆற்றில் நான் இடது பக்கமும், எங்களுடைய குழுவின் வெள்ளைக்காரர் ஸ்பைக் ரீட் வலது புறத்திலும் வந்தார்.

வலது புறத்தில் சுழன்று அடிக்கும் எடி நீரோட்டத்தில் அவர் சிக்கிக்கொண்டார். அதிலிருந்து அவர் வெளிவரவே 15 நிமிடங்கள் ஆனது. நாங்கள் ஆற்றின் இடது புறம் இருந்ததால் எங்களுக்குப் பிரச்சினையில்லை, எளிதாகக் கடந்துவிட்டோம்.

பிஹாரில் ஒவ்வொரு டவுனிலும் ஹோட்டலைத் தேடிக் கண்டுபிடித்து, எங்களுடைய உடைமைகளை எல்லாம் எடுத்துப் போய் இரவில் தங்க வேண்டும். காலையில் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஆற்றுக்கு வந்து பேட்லிங் செய்ய வேண்டும். இது அவ்வளவு சாதாரணமாக நடக்கவில்லை.

பதேஷ்வர்கான் பகுதியில் ராஜ்மஹால் என்ற குன்றுகளைப் பார்த்தோம். இது நதிக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது. இப்பகுதியில் நதி 100 அடி அளவுக்கு ஆழமடைந்துவிடுகிறது. கடலில் செல்வதைப் போன்ற பிரம்மாண்டப் படகுகள், இங்கே ஆற்றிலேயே செல்கின்றன.

கங்கை ஆறு பிஹாரில் இருந்து மேற்கு வங்கத்துக்குள் நுழைவதற்கு முன் ஜார்கண்ட் வழியாகக் கொஞ்சத் தூரம் செல்கிறது. அந்த மாநிலத்துக்குள் நுழைந்து மேற்கு வங்கத்தை இப்போது தொட்டுவிட்டோம். நதி கிழக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. தெற்குப் பகுதியில்தான் நாங்கள் செல்ல வேண்டிய ஃபராகா நகரம் இருந்தது.

தொடர்ந்து 11 நாட்களாக 500 கி.மீ.க்கு இடைவெளி இல்லாமல் பேட்லிங் செய்துவருகிறோம். ரொம்பவே களைத்துப் போய்விட்டோம். ஆனால், அதற்காகச் சோர்ந்துவிட்டோம் என்றால் முடியாது. தொடர்ந்து பேட்லிங் செய்துகொண்டே இருந்தாக வேண்டும். கங்கை நதியில் கலக்கும் கங்கா சாகரை அடைய இன்னும் 560 கி.மீ.தான் இருக்கிறது.

கடைசி 500 கி.மீ.

தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in