

இன்றைக்கு ராக்கெட்டுகள் மட்டுமல்ல, உணவுப் பொருட்களும் டெலிவரிக்காகக் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுவிட்டது. காலை உணவை ஒரு நாட்டிலும் மதிய உணவை வேறொரு நாட்டிலும் சாப்பிடும் அளவுக்குப் பயண தூரங்களின் எல்லைகளும் சுருங்கிக்கொண்டே வருகின்றன. அதை மெய்ப்பிக்கும் வகையில் சென்னையைச் சேர்ந்த ஓர் இளம் பெண் ஒரு புதிய சாதனையைப் படைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.
சென்னையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர் மானசா கோபால். இவருடைய சாதனைப் பயணம் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றிருக்கிறது. உணவு டெலிவரிக்காகப் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்றிருக்கிறார் என்று மானசா பற்றிய தகவல்கள் இணையத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. மானசா கோபால் அப்படி என்ன சாதனையைச் செய்துவிட்டார்?
மானசா தற்போது சிங்கப்பூரில் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். சுற்றுச்சூழல் உயிர் வேதியியல் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். அண்டார்க்டிகாவில் ஆராய்ச்சி செய்யும் குழுவினருக்கு உணவுப் பொருட்களை டெலிவரி செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் மானசா.
சிங்கப்பூரிலிருந்து உணவை டெலிவரி செய்வதற்காக நான்கு கண்டங்களைக் கடந்திருக் கிறார் இவர். அதாவது, கிட்டத்தட்ட 30 ஆயிரம் கிலோ மீட்டர் தரைவழியாகவும் வான் வழியாகவும் மானசா கடந்து சென்றிருக்கிறார். செல்லும் வழியில் எல்லாம் மோசமான சாலைகள், கடும் பனிப்பொழிவு எனப் பல்வேறு சவால்களையும் கடந்துதான் அண்டார்க்டிகாவுக்குச் சென்று சேர்ந்திருக்கிறார்.
பயணத்தின்போது கோவிட் தொற்று, காலில் எலும்பு முறிவு என்று பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளார். தன்னுடன் பயணித்தவர்கள் தன்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றபோதும் துவண்டுபோகாமல் அனைத்திலிருந்தும் மீண்டு, பயணத்தைத் தொடர்ந்தார். வெற்றிகரமாக அண்டார்க்டிகாவுக்குச் சென்றவர், ஆராய்ச்சிக் குழுவினருக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பினார். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், சிப்ஸ், பிஸ்கட்டுகள், மசாலாப் பொருட்கள் போன்றவையே மானசாவின் டெலிவரி பட்டியலில் இருந்திருக்கின்றன.
மானசாவின் இந்தப் பயணம் ஓர் உலக சாதனையாகக் கருதப்படுகிறது. அதேவேளையில் உணவை டெலிவரி செய்வதற்காக இவ்வளவு தூரம் ஏன் மானசா பயணிக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. அதற்கான காரணமும் தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேசப் பயணத்தை ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் உயிரி வேதியியல் ஆராய்ச்சியாளாரான மானசா, இந்தப் பயணத்துக்காக 2019இல் விண்ணப்பித்து 2020இல் தேர்வாகியிருக்கிறார்.
தொலைதூரப் பயணம் என்பதால் யோகா, உடற்பயிற்சி செய்து தன் உடலை வலுப்படுத்திக்கொண்டார். இந்தப் பயணத்துடன் உணவு டெலிவரியையும் மானசா இணைத்துக்கொண்டார். அதாவது இந்தத் தொலைதூரப் பயணத்தை ‘ஃபுட் பாண்டா’ என்னும் உணவு விநியோக நிறுவனத்துடன் இணைந்து செய்ததன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் மானசா.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறு கண்டங்களைக் கடந்தவர், கடைசி இலக்காக அண்டார்க்டிகாவை வைத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். நம்மூரில் சாலைகளில் லிஃப்ட் கேட்டுப் பயணிப்பதைப்போல, கண்ணில் தென்பட்ட வாகனங்களில் லிஃப்ட் கேட்டு ஈரான் வரை சென்றிருக்கிறார்.
பிறகு ஜிம்பாப்வேயிலிருந்து ஜாம்பியா வழியாக நடந்து சென்றது, சுமத்ரா காடுகளில் தங்கியது என சாகச திக் திக் பயணங்களும் இதில் அடக்கம். இப்படிப் பல வழிகளில் பல நாடுகளைக் கடந்துதான் அண்டார்க்டிகாவை அடைந்திருக்கிறார் மானசா. எந்தப் பொருளாதார பின்புலமும் இல்லாத சென்னைப் பெண்ணான மானசா இந்தப் பயணத்துக்காகப் போதுமான நிதி திரட்டப் போராடியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மானசாவின் அண்டார்க்டிகா உணவு டெலிவரி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டவுடன் வேகமாகப் பகிரப்பட்டன. இதற்கான பார்வைகளும் எகிறிக்கொண்டே இருக்கின்றன.