

அதெல்லாம் அந்தக் காலம்....
கலிகாலமா போச்சு...
அது ஒரு கனாக் காலம்...
ஒன்ஸ் அபான் எ டைம்...
போன்ற வார்த்தைகளை அதிகம் பயன் படுத்துபவரா நீங்கள்? சந்தேகமே வேண்டாம், 2கே கிட்ஸ்களின் பார்வையில் நீங்கள் ‘பூமர் அங்கிள்’ வகையறாவுக்குள் வந்துவிட்டீர்கள். ஒரு காலத்தில் உறவுமுறைக்குள்ளும் சகோதர உறவுமுறையில் இருப்பவர்களை குழந்தைக்கு அறிமுகப்படுத்தவும் சொல்லப்பட்ட ‘மாமா’ என்கிற வார்த்தை, ஆங்கிலவழிக் கல்வி முறையால் ‘அங்கிள்’ என்றாகி, பின்னர் முன்பின் தெரியாதவர்களையும் வயது வித்தியாசம் இல்லாமல் ‘அங்கிள்’ என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
‘பூமர் அங்கிள்’ என்று ஏளனம் செய்யும் இந்த வார்த்தைகள் இன்றோ நேற்றோ பிறந்தவை அல்ல. அதன் வயது 70க்கும் மேற்பட்ட ஆண்டுகள். 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு உலகம் முழுவதும் இருந்து போருக்குச் சென்ற ராணுவ வீரர்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லத் தொடங்கினர். அப்படித் திரும்பிச் செல்ல ஆரம்பித்த அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மக்கள்தொகை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. அதை ஒரு ’பூம்’ என்று வர்த்தணித்தார்கள். எனவே, அந்தக் காலகட்டத்தில் பிறந்து 50 வயதைக் கடந்தவர்களை அடுத்த தலைமுறையினர் ‘பூமர் அங்கிள்கள்’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
அப்படிப் பிறந்த அந்த வார்த்தைகள்தான் இன்று பெரியவர்களின் வாயை அடைக்கவும், அவர்களைப் பரிகாசம் செய்யவும் இன்றைய தலைமுறையால் பயன்படுத்தப்படுகிறது. எப்போது பார்த்தாலும் அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று ‘அந்தக் காலத்துல...’ என்று ரெக்கார்டரை ரீவைண்ட் செய்யத் தொடங்குபவர்கள்தாம் பூமர்கள். அதாவது, பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருப்பவர்களை பூமர் அங்கிள் என்று இன்றைய இளசுகள் சொல்ல ஆரம்பித்தார்கள். சமூக ஊடகங்களின் தாக்கத்தால் இன்றைக்கு அந்த வார்த்தைகள் இன்னும் பரவலாகிவிட்டன.
என்றோ வழக்கொழிந்துபோன இந்த வார்த்தைகள் ஒரு யூடியூப் அலைவரிசை மூலமாக மீண்டும் டிரெண்டானது. அதைச் சகலத்துக்கும் பயன்படுத்தத் தொடங்கினார்கள் 2கே கிட்ஸ்கள். ஒரே விஷயத்தைத் ‘திரும்பத் திரும்பப் பேசுறே நீ’ என்கிற வகையானவர்களையும் பூமர் அங்கிள் பட்டியலுக்குள் அடைக்கத் தொடங்கினார்கள்.
சொல்ல வரும் விஷயத்தை ஜவ்வுபோல இழுத்தாலும் பூமர்கள் என்கிற அடைமொழியைத் தட்டிவிட்டார்கள். போதாக்குறைக்கு திரைப்படங்களிலும் இந்த வார்த்தைகள் அதிகம் புழங்கியதால், இன்று இந்த வார்த்தைகள் இளசுகள் பயன்படுத்தும் முக்கிய வார்த்தைகளாகிவிட்டன. இளசுகளைக் குறிவைத்து ‘பூமர் அங்கிள்’ என்கிற பெயரில் யோகிபாபு நடிக்கும் ஒரு படமே தயாராகி வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பெரியவர்கள் எதைச் சொன்னாலும் கேட்கவே பிடிக்காதவர்களாக இன்றைய தலைமுறையினர் இருக்கிறார்கள். நாளை நாமும் அந்த பூமர் அங்கிள் இடத்தைக் கடந்துசெல்லாமல் இருக்கப்போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்தால் சரி!