

தென்னிந்தியாவில் மிக நீளமான ஆறான கோதாவரியைப் பற்றி எட்டு வருடங்களாக எனக்குத் தெரியும். நான் மண்ணியலாளராக வேலை பார்க்கும் நிறுவனத்தின் அலுவலகம் ராஜமுந்திரியில் இருப்பதுதான் அதற்குக் காரணம். பணி நிமித்தம் கடலுக்குள் இருக்கும் டிரில்லிங் ஆய்வகத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பல முறை சென்று திரும்பியிருக்கிறேன். அப்படி ஹெலிகாப்டரில் பயணிக்கும்போது பருந்துப் பார்வையில் கோதாவரியின் அழகையும் அது உருவாக்கும் பரந்த பாசனப் பகுதியையும் பார்த்து, வியந்து, ரசித்திருக்கிறேன். சென்னையைத் தாண்டி எனக்கு நன்கு தெரிந்த இடம் கோதாவரி நதியும், அது உருவாக்கும் பாசனப் பகுதியும்தான்.
மகாராஷ்டிர மாநிலத்தில் திரியம்பகேஷ்வர் என்ற இடத்தில் உருவாகும் கோதாவரி ஆறு, தெலங்கானா வழியே பத்ராசலம் என்ற இடத்துக்கு அருகே போலாவரத்துக்கு வந்து சேர்கிறது. இந்த இடத்தில்தான் சின்னச் சின்ன ஆறுகள் எல்லாம் சங்கமமாகிப் பெரிய ஆறாக கோதாவரி உருவெடுக்கிறது. இந்தப் பகுதியில் இருந்துதான் கோதாவரி சமவெளியிலும் ஓட ஆரம்பிக்கிறது. பேட்லிங் பற்றித் தெரியாத காலத்திலேயே கோதாவரியில் 55 கிலோ மீட்டருக்குப் படகில் பயணித்து, அதன் அழகை ரசித்து அனுபவித்திருக்கிறேன்.
பருவமழைப் பெருவெள்ளம்
கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதிதான் ‘பாப்பி’ மலைகள். கிழக்குத் தொடர்ச்சி மலையின் வழியாகப் பாய்ந்துவரும் கோதாவரி ‘பாப்பி’ மலைப் பகுதிக்குப் பிறகு, சமவெளியில் ஓட ஆரம்பிக்கிறது. அதற்கு முன் மிகப் பெரிய பள்ளத்தாக்கையும் இந்த ஆறு உருவாக்குகிறது. இங்கு தண்ணீர் பிரம்மாண்டக் குளம் போல் நிற்கும். பேட்லிங் செய்வதில் அனுபவம் பெற்ற பிறகு, இந்தப் பிரம்மாண்டக் குளத்தில் பேட்லிங் செய்யும் கனவுடன், அங்கே புறப்படத் தயாரானேன்.
டெல்லியிலிருந்து ஹைதராபாத் வந்தடைந்து, அங்கிருந்து ராஜமுந்திரி சென்றேன். விமானத்தில் இருந்து கோதாவரியைப் பார்த்தபோது, தென்மேற்குப் பருவ மழைக்காலம் என்பதால் சாதாரண கோதாவரி, அப்போது இரண்டு மடங்கு பெரிதாகி இருந்தது. மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தண்ணீர் பழுப்பு நிறத்தில் கலங்கலாக ஓடிக்கொண்டிருந்தது.
முன்னோடிப் பயணம்
ராஜமுந்திரியில் எங்கள் நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்றேன். மேலாளரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, பேட்லிங் பற்றிய செய்திகளை இணையத்தில் அவர் மேய்ந்துகொண்டிருந்தார். பேட்லிங்கில் அவருக்கு உள்ள ஆர்வம் எனக்குப் புரிந்தது. அங்கிருந்த இரண்டு மண்ணியல் நிபுணர்கள் (Geologist) என்னுடைய கோதாவரி பேட்லிங் பயணத்துக்கு உதவச் சம்மதித்தார்கள். அதில் ஒருவர் மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பலமாக அமைந்தது.
என் பயணத் திட்டத்தை அவர்களிடம் விவரித்தேன். கோதாவரி ஒரு பெருநதி என்பது மட்டுமில்லாமல், நான் பேட்லிங் செய்வதை இதற்கு முன்னால் அவர்கள் பார்த்ததும் இல்லை. அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகச் சிறய படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, ஆற்றில் எதிர்த்து வரும் தண்ணீரில் 50 நிமிடங்களுக்குப் பேட்லிங் செய்து, ஆறு கி.மீ தொலைவைக் கடந்து காட்டினேன். காலை, மாலை என இரண்டு வேளையும் பேட்லிங் செய்தேன். எனக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கும், கோதாவரியில் பேட்லிங் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்கும் ஏற்பட இந்த முன்னோட்டப் பயணம் வசதியாக அமைந்தது.
ராஜமுந்திரியில் இருந்து போலாவரம்வரை பேட்லிங் செய்வதே திட்டம். போலாவரம் செல்வதற்கு ஒரு பெரிய படகை ஏற்பாடு செய்துகொண்டோம். ஆனால், அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு ஆற்றில் தண்ணீர் 5 முதல் 6 அடி குறைந்திருந்தது. பெரிய படகு தரைதட்டிவிடும் என்பதால் வர மறுத்துவிட்டார்கள். மீனவ நண்பரிடம் 30 கிலோமீட்டர் போக வேண்டும், சின்ன ரப்பர் படகை எடுத்துக்கொள்ளுங்கள் என்றேன். ஒற்றை இன்ஜின் கொண்ட மோட்டார் படகுதான் கிடைத்தது, என்ன ஒரே பிரச்சினை, மழை வந்தால் ஆபத்து. காலை 8:30 மணிக்குப் படகில் ஏறினோம். நான் பயணம் செய்யத் தொடங்கும் இடமும் வந்தது.
(அடுத்த வாரம்: துரத்தி வந்த பருவமழை)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com
உலகத்திலேயே மிகவும் மோசமாக மாசுபட்ட நகரமான கான்பூரை நெருங்கிவிட்டோம். இந்த வாரம் ஃபரூகாபாத், கானூஜ் என்ற இரண்டு இடங்களைக் கடந்திருக்கிறோம். கானூஜ் இந்தியாவின் நறுமணத் தலைநகர் எனப்படுகிறது. இந்த இடம்வரை ஆறு சுத்தமாகவே இருக்கிறது. நகரங்கள் இடைப்படும்போது கழிவுநீர் கலப்பது, குப்பைகள் கொட்டுவது அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் மாசுபாடு அதிகமில்லை. கிராம மக்கள் ஆற்று நீரையே குடிக்கப் பயன்படுத்துகிறார்கள்.
தொடர்ச்சியாக கங்கை நதி ஓங்கில்கள், மக்கர் எனப்படும் பெரிய முதலைகள், சாரைப் பாம்புகள், ஃபரூகாபாத்துக்கு முன்னால் இருவாச்சி, கொம்பன் ஆந்தை, கழுகு உள்ளிட்ட பறவைகளைப் பார்த்தோம். ஓங்கில்கள் தொடர்ச்சியாக இருப்பதை வைத்துப் பார்க்கும்போது ஆறு மாசுபடாமல் இருப்பதையும், உயிரோட்டமாக இருப்பதையும் புரிந்துகொள்ளலாம். ஏனென்றால், ஓங்கில்கள் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருக்கக்கூடியவை.
ஃபரூகாபாத் அருகே மீனவர்களின் வலையில் சிக்கிய நன்னீர் ஆமைகளை மீட்டு மீண்டும் ஆற்றில் விட்டோம். அவை உணவுக்குப் பயன்படுவதில்லை என்பதால், மீனவர்களே பொதுவாக ஆற்றில் அவற்றைத் திரும்ப விட்டுவிடுகிறார்கள். ஆமைகள் நதியின் அழுக்குகளைத் தூய்மைப்படுத்தக்கூடியவை.
இந்த முறை கங்கை ஆற்றில் நீரோட்டம் அதிகம், ஆற்றோர அரிப்பும் அதிகமாக இருக்கிறது. ஆற்றின் வளைவு நெளிவுகளால் அலைகழிக்கப்பட்டோம்.
சில இடங்களில் Twister எனப்படும் சூறைக்காற்று திடீரென்று குறுக்கிட்டு எங்கள் கண்ணெதிரே அதிகவேகமாகக் கடந்து சென்று பயமுறுத்தியது. அப்போது தொடர்ந்து பேட்லிங் செய்ய முடியுமா என்று பயந்தோம். நல்ல வேளையாக, எங்கள் பயணத்தில் சூறைக்காற்று அசம்பாவிதத்தை ஏற்படுத்தவில்லை. 10 கி.மீ. கடந்தவுடன் காற்றின் திசை மாறி எங்கள் பேட்லிங் பலகையைத் தள்ள ஆரம்பித்துவிட்டது.
இப்போது கங்கை ஆற்றின் 610 கி.மீ. தொலைவைக் கடந்திருக்கிறோம்.