மொபைல் டார்ச்சில் ஒளிர்ந்த ‘அன்பே வா!

மொபைல் டார்ச்சில் ஒளிர்ந்த ‘அன்பே வா!
Updated on
2 min read

பணமிருக்கும் ஏ.டி.எம். இயந்திரத்தின் முன் முண்டியடிக்கும் கூட்டம்போல கடந்த வாரத்தின் இறுதி நான்கு நாட்களும் மியூசிக் அகாடமியில் அவ்வளவு கூட்டம். காரணம், ‘தி இந்து’ நடத்திய நவம்பர் திருவிழா. அதிலும் இசை நிகழ்ச்சியை நடத்திய கேரளத்தின் ‘மசாலா கஃபே’ குழுவும் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ‘லிங்காலயம்’ குழுவினரின் ‘ஸீ உடோகா’ நடன நிகழ்ச்சியும் எல்லோரையும் கவனிக்கவைத்தது.

‘மசாலா கஃபே’ நிகழ்ச்சியில் கேரளத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற (நாடன்) பாடல்களும் தமிழ்த் திரைப்படப் பாடல்களும் சரிவிகிதத்தில் கலந்திருந்தன. “வணக்கம் சென்னை… இதுதான் மியூசிக் அகாடமியில் எங்களின் முதல் நிகழ்ச்சி” என சூரஜ் சந்தோஷ் பாடிய ‘ஆலயால் தர (ரை) வேணம்’ எனும் முதல் பாடல் தொடங்கி, இறுதிப் பாடலான ‘காந்தா’ வரை அவரிடம் அப்படியொரு எனர்ஜி வெளிப்பட்டது. ஒட்டுமொத்தக் குழுவையும் தன்னுடைய குரலால் தாங்கிப்பிடித்தார் சூரஜ்.

காதல் கீதமான முன்பே வா

நாட்டுப்புறப் பாடல்களிலும் திரையிசையிலும் வெளிப்படும் செவ்வியல் இசையின் கூறுகளைத் தொட்டுக்காட்டி, எல்லைகளைக் கடந்து இசையின் பல பரிமாணங்களோடும் பயணித்தது அன்றைய இசை நிகழ்ச்சி. இளையராஜாவின் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’, ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா’ பாடல்களின் பல்லவி, சரணங்களைக் கோத்து ஓர் இசை மாலையைக் கொண்டுவந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் முகிழ்த்த ‘சினேகிதனே’, ‘பச்சை நிறமே’, ‘அரபிக் கடலோரம்’, ‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம்கூடத் தங்கம்தானே’, ‘ராசாத்தி என் மனசு என்னதில்ல’, ‘உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி’ ஆகிய பாடல்களை ‘மேஷ்-அப்’ பாணியில் இணைத்துக் கொடுத்த நேர்த்திக்கு அரங்கமே ஆடித் தீர்த்தது.

இந்த அமர்க்களம் எல்லாம் முடிந்ததும், மென்மையாக, காதலின் தியானமாக (இந்தப் பாடலுக்கு அரங்கில் மொபைலின் டார்ச்சை ஒளிர்த்தபடி அசைத்தது சூழ்நிலையை ரம்யமாக்கியது) ஒலித்தது ‘முன்பே வா… என் அன்பே வா’ பாடல். தொடர்ந்து ‘தில் சே’ படப் பாடலை, கர்னாடக இசை மேடையில் வெளிப்படும் ராகம், தானம், பல்லவி முறையில் ஆலாபனை, நிரவல், கற்பனா ஸ்வரங்களுடன் பாடியதும், ‘உறியடி’ திரைப்படத்தில் இந்தக் குழுவினரின் இசையில் இடம்பெற்ற ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ பாடலைப் பாடிய விதமும் நிகழ்ச்சியை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு சென்றது. நிகழ்ச்சியின் இறுதியாகப் பாடிய ‘காந்தா’ பாடலை யூடியூப்பில் 30 லட்சம் பேர் கண்டு களித்துள்ளார்களாம்! உச்ச ஸ்தாயியில் சூரஜ் பாட, அரங்கமே பாடலைத் தொடர்ந்ததில்தான், அந்தப் பாடலுக்கு இருக்கும் ரசிக பலம் புரிந்தது. அரங்கில் திரண்டிருந்த தமிழ், மலையாள ரசிகர்களும் விரும்பும் மசாலாவாக அன்றைய நிகழ்ச்சி அமைந்தது.

ஆஸ்திரேலிய மேளம், இந்திய நடனம்

ஒரு புல்லாங்குழல். ஒரு செல்லோவின் கூட்டணியில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை அரூபமாக நம்முன் கொண்டுவந்தனர். ஐம்பெரும் பூதங்களின் நிலையை வெளிக்கொணரும் விதத்தில் அமைந்திருந்தது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த லிங்காலயம் குழுவினரின் நடனம். பெரிய முரசு வாத்தியங்களை வெவ்வேறு தாளகதியில் ஆஸ்திரேலியக் கலைஞர்கள் வாசிக்க, அதற்கு ஐந்து பெண்கள் பரத நாட்டியம் ஆடியது புதிய காட்சி அனுபவமாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in